ஆணா? பெண்ணா? ஸ்கேன் பரிசோதனை: ஷாருக்கானுக்கு மும்பை கோர்ட் நோட்டீஸ்

நடிகர் ஷாருக்கான் கவுரி தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் 3-வது குழந்தை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே 27-ந்தேதி பிறந்தது.
இந்த குழந்தை கருவில் இருக்கும்போது, அது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள விரும்பியதாக பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் தகவல்கள் வெளியானது.
கருவில் இருக்கும் போதே குழந்தை ஆணா? பெண்ணா? என ‘ஸ்கேன்' செய்து பார்க்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதை மீறுவது தண்டனைக் குரிய குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சமூக சேவகியும் வக்கீலுமான வர்ஷா தேஷ்பாண்டே அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தையை பார்த்தது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மீது ஏற்கனவே நான் புகார் செய்தேன். அதன் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே தற்போது கோர்ட்டை அணுகி வழக்கு தொடர்ந்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்தி ரேட்டு உதய் பாத்வாத் இது பற்றி விளக்கம் அளிக்குமாறு ஷாருக்கான் தம்பதி மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
வழக்கு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஷாருக்கான், ‘‘எங்களுக்கு மகன் பிறந்து இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவன் நலமாக இருப்பான் என்று நம்புகிறோம். ஆனால் இப்போது வழக்கு தொடர்ந்து இருக்கும் தகவல் வருத்தம் அளிக்கிறது'' என்றார்.