For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ மாணவர் சேர்க்கையில் குளறுபடி, மோசடி.. ராமதாஸ் புகார்

Google Oneindia Tamil News

Ramadoss sees fraud and violation in MBBS-BDS counselling
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய அளவில் மோசடிகளும், குளறுபடிகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனவே நடந்து முடிந்த மாணவர் சேர்க்கையை ரத்து செய்து விட்டு புதிதாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கடைபிடிக்கப்பட்ட தவறான முறை காரணமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 116 மாணவ, மாணவியர் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1823 இடங்கள் பல்வேறு குளறுபடிகளுடன் நிரப்பப்பட்டன.

அதன்பின் அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1141 இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தான் சமூகநீதியின் அடிப்படைக்கே வேட்டு வைக்கும் வகையில் மிகவும் தவறான நடைமுறையை அதிகாரிகள் கடைபிடித்துள்ளனர். வழக்கமாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்போது, இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

ஆனால், அத்தகைய பட்டியல் எதையும் தயாரிக்காத மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகள் முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்தியுள்ளனர். இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இஸ்லாமிய மற்றும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 116 மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட கலந்தாய்வின்போது பொதுப்பிரிவுக்கு மொத்தம் 565 ஒதுக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது பொதுப் பிரிவுக்கு மொத்தம் 354 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களுக்கு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம்பெற்றிருந்த பலர் புதிய பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். இதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் காலியான இடங்கள் அந்தந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டிருந்திருக்கும்.

அதுமட்டுமின்றி, முதல் கட்ட கலந்தாய்வில் சாதாரண மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும். கடந்த காலங்களில் இத்தகைய நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இப்போது புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படாமல் முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், புதிய பொதுப்பட்டியலில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வேண்டிய 17 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 74 இடங்களும், பட்டியலினத்தவருக்கு கிடைக்க வேண்டிய 13 இடங்களும், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய 2 இடங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.

இது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி ஆகும். 2006 மற்றும் 2007 ஆண்டுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 20.03.2008 அன்று தீர்ப்பளித்த நீதியரசர்கள் எலிப்பி தருமாராவ், சிங்காரவேலு ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தது.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய தமிழக அரசு, நலிவடைந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறிக்க கூடாது.

எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துவிட்டு அனைத்து இடங்களுக்கும் புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has urged the govt of Tamil Nadu to cancel MBBS-BDS counselling and called for fresh counselling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X