For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது கேலிக்குறியது...: விஜயகாந்த்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழினப் படுகொலை புரிந்தும், மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாகியும், சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக குற்றக் கூண்டில் நிற்கும் இலங்கை அரசு கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதே கேலிக்கும், கண்டனத்திற்கு உரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கச்சத் தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆகவே கச்சத் தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைத்து தமிழர் வாழும் ஒரே பகுதி என்று 1987ஆம் ஆண்டு இந்திய பிரதமரும், இலங்கை அதிபரும் கையெழுத்திட்டனர். ஆனால் இதை இலங்கை அப்பொழுதே கைவிட்டு விட்டது. இந்த ஒப்பந்தத்தை மட்டும் இலங்கை மீறலாமா?

Commonwealth meet in SL is ridiculous, says Vijayakanth

ஒருவழிப்பாதையா?

வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கும் அந்த ஒப்பந்தப்படி அதிகார பகிர்வையும் தர மறுத்து வருகிறது. இதுதான் ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கும் இலட்சணமா? ஒப்பந்தம் என்பது இலங்கையை பொறுத்த வரையில் ஒரு வழிப்பாதைதான்.

மீன்பிடி உரிமை

1974ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை போட்ட ஒப்பந்தப்படியும், 1976ல் அதில் கொண்டு வந்த கூடுதல் பிரிவுகளின்படியும் தமிழக கடலோர மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையும் பறிபோய்விட்டது, கச்சத் தீவும் பறிபோய்விட்டது. அதனால் மீனவர்கள் தினந்தோறும் அல்லலுக்கு ஆளாகின்றனர். ஆகவே இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோருவது எப்படி அநியாயமாகும்?

நாம் ஏன் மதிக்க வேண்டும்?

இலங்கையில் உள்ள சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் 13வது சட்ட திருத்தத்தின்படி தமிழர்களின் வடக்கு மாகாணத்திற்கு நிலம் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட அதிகாரத்தை நான் எப்படி அளிக்க முடியும் என்று இலங்கை அதிபர் மகிந்தே ராஜபக்சே கேட்கிறார். இலங்கையில் உள்ள மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்கிறபொழுது, ஒப்பந்தத்தை மதிக்க மாட்டேன் என்று சொல்லுகின்றது இலங்கை அரசு. அதே போல நம்முடைய மக்கள் பாதிக்கப்படுகிறபொழுது நாம் ஏன் 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும்?

காமன்வெல்த் மாநாடு

தமிழினப் படுகொலை புரிந்தும், மனித உரிமைகள் மீறலுக்கு ஆளாகியும், சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளியாக குற்றக் கூண்டில் நிற்கும் இலங்கை அரசு கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடத்துவதே கேலிக்கும், கண்டனத்திற்கு உரியதாகும். நேற்று வரை இலங்கையில் தமிழ் மக்களை கொன்று குவித்தனர். இன்று இஸ்லாமியர்களை தாக்கி அவர்கள் மசூதியை இடித்துள்ளனர்.

மக்கள் விரோத போக்கு

அண்டை நாட்டு நல்லுறவு அவசியம் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையை பொறுத்தவரையில் நடந்து கொள்கிறது. ஆனால் இலங்கையோ, இந்தியா எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. தங்கள் சுயநலமே முக்கியம் என்ற அடிப்படையில் தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கையே கையாண்டு வருகிறது.

எதிரான செயல்

கொழும்புவில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதையே இந்தியா தடுத்து இருக்க வேண்டும். ஏனெனில் அத்தகைய மாநாடு நடந்தால் அதை போர்க் குற்றவாளியான மகிந்தே ராஜபக்சேதான் தலைமை ஏற்று நடத்த வேண்டும். அதுவே மனித குலத்திற்கு எதிரான செயல். தொடர்ந்து இந்தியா நீட்டும் நேசக் கரத்தை புறக்கணித்து, நியாயத்தை நிலை நிறுத்த முன்வராதது மட்டுமல்ல, கெடுதல்களையும் செய்து வருகின்றது. கொட்டினால் தேள், இல்லையென்றால் பிள்ளைப் பூச்சி என்பார்கள்.

புறக்கணிக்க வேண்டும்

இந்தியாவை பொறுத்த வரை இலங்கை அரசுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆகவே, கொழும்புவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், இந்திய பிரதமர் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தே.மு.தி.க. சார்பில் நான் கேட்டுக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMDK president Vijayakanth said that conducting Commonwealth meet in Sri Lanka is ridiculous.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X