For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்துறையை நவீனப்படுத்த 14,600 காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Free hand to cops helped combat land grab: Jayalalithaa
சென்னை: சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக காவல் துறையை நவீனமயமாக்கி அதன் செயல் திறனை மேலும் வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமையன்று ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தின் உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

காவல்துறை, ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத் துறை மற்றும் ஊர்க்காவல் சமூக பாதுகாப்புப் பயிற்சி படை ஆகியவற்றில் தீரமாகவும், சிறப்பாகவும் பணியாற்றிய 61 பேர்களுக்கு மேற்கூறிய பதக்கங்களை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தீரச் செயல், தகைசால் பணி, மெச்சத் தக்க பணி, சீர்திருத்தப் பணி, சிறப்புப் பணி, சிறந்த புலனாய்வு, விரல் ரேகை அறிவியல், சீர்மிகு பணி, தொழில்நுட்ப சிறப்புப் பணி மற்றும் பொது சேவைக்கான, சீர்மிகு பணி ஆகியவற்றில் திறம்பட செயலாற்றிய, காவல் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத் துறை மற்றும் ஊர்க்காவல் மற்றும் சமூகப் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 549 நபர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் இந்த இனிய விழாவில் பங்கேற்றதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பதக்கங்களை பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் மூன்றாவது முறையாக தமிழக மக்களின் பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் பல்வேறு அதிகார மையங்களின் பிடியில் சிக்கிக் தவித்த காவல் துறை சுதந்திரமாக செயல்படும் வகையில் காவல் துறையினர், தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கு எவரும் எவ்வித குறுக்கீடும் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தினேன்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக காவல் துறையை நவீனமயமாக்கி அதன் செயல் திறனை மேலும் வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் தொடர்ந்து எடுத்து வருகிறேன்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்புப் பணியை காவல் துறையினர் செவ்வனே மேற்கொள்ளும் வகையில் காவல் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அவ்வப்போது நிரப்ப உத்தரவிட்டுள்ளேன்.

இதுவரை, 12,162 காவலர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13,294 இரண்டாம் நிலைக் காவலர்கள், 886 உதவி ஆய்வாளர்கள், 234 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 197 விரல் ரேகை பதிவு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 14,611 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சேவைப் பணியை நீங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள். வாழ்விலும், பணியிலும் முன்னேற தேவையானது சவால். தடைகள் ஏற்படும் போது தான் உத்வேகம் பிறக்கும். தடைகளை தகர்த்தெறிய முனையும் போது தான் புதிய வழிகள் பிறக்கும். சவால் தான் சாதனைக்கு வழி வகுக்கும்.

எல்லாப் பணிகளுமே, சவால்கள் நிறைந்த பணிகள் தான். இருப்பினும், காவல் பணியில் சவால்கள் சற்று அதிகமாகவே உள்ளன. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற இக்கால கட்டத்தில் தொழில்நுட்பம் வாயிலாக குற்றங்கள் பெருகுகிறது என்றாலும், அதே தொழில்நுட்பம் தான் குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கவும் வழிவகை செய்கிறது.

தொழில்நுட்பம் என்கிற சவாலே சாதனை புரியவும் உதவுகிறது. பணியில் உங்களுக்கு ஏற்படுகின்ற சவால்களை எதிர்கொள்ள உங்களுக்கு தேவை துணிச்சல். துணிச்சல் என்பது தன்னம்பிக்கைக்கு மறு பெயர். அந்த துணிச்சல் இல்லையென்றால் சமயத்தில் உயிரையே காப்பாற்றிக் கொள்ள இயலாமல் போய்விடும்.

காவல் பணித் திறன் போட்டிகளில் தமிழ் நாட்டுக் காவல் துறையினர் கலந்து கொண்டு பதக்கம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத் தொகையை மிக அதிகமாக உயர்த்தி நான் வழங்கியுள்ளேன்.

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அல்லும் பகலும் அயராது மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினர் தங்கள் கடமையினை மேலும் சிறப்புற ஆற்றும் வகையில் அவர்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பொதுமக்களையும் இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு முதல்வர் ஜெயல்லிதா தெரிவித்தார்.

பிரியா ரவிச்சந்திரன்

மானாமதுரை டி.எஸ்.பி வெள்ளைத்துரை, தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் உள்பட 549 பேருக்கு காவலர் விருதுகளை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 2003- ஆம் ஆண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சேர்ந்தவர் பிரியா ரவிச்சந்திரன். சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு அடுத்தபடியாக அரசின் முக்கிய அலுவலகங்கள் செயல்படும் எழிலகக் கட்டடத்தில் 2012 ஜனவரி 16- ஆம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் தனது குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தார். அப்போது, பிரியா ரவிச்சந்திரனுக்கு பெரும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த தீயணைப்புப் பணியில் தீயணைப்பு அலுவலர்கள் ஆர். முருகன், கே.அன்பழகனும் ஈடுபட்டனர். அதில், அன்பழகன் இறந்தார். இந்த மூன்று பேருக்கும் குடியரசுத் தலைவருக்கான விருதுகள் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகளை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் மூவருக்கும் வழங்கி கௌரவித்தார். அன்பழகனுக்குப் பதிலாக அவரது மகன் கிருஷ்ணசாமி பெற்றுக் கொண்டார்.

டி.எஸ்.பி வெள்ளைத்துரைக்கு விருது

காவல் துறை உயரதிகாரிகள் சைலேந்திர பாபு, பிரதீப் வி.பிலிப், குணசீலன், வெள்ளைத்துரை, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஆறுமுகம், ஸ்மித் சரண் உள்ளிட்ட முக்கிய காவல் துறை அதிகாரிகள் விருது பெற்றவர்களாவர்.

English summary
Chief Minister J Jayalalithaa on Friday took pride in saying that the Police Department in Tamil Nadu was receiving compliments from the people for discharging their duties in an efficient manner since they were able to function without any interference from any quarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X