For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவுப் பாதுகாப்பு மசோதா: திருத்தங்களை ஏற்றால் மட்டுமே வாக்களிப்போம் - ஜெ

By Shankar
Google Oneindia Tamil News

Jayalalithaa sets terms to support food security bill
சென்னை: உணவுப் பாதுகாப்பு மசோதாவில் தாம் வலியுறுத்தியுள்ள திருத்தங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிப்பாளர்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மசோதா இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வருகிறது.

இந்த நிலையல் இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

"தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கருத்துத் தெரிவித்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, இது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் பெரிய துரோகம் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

இதுதவிர, சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்த பிரச்னையில் மத்திய அரசுக்கு தி.முக. ஆதரவு அளித்ததைச் சுட்டிக்காட்டி, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி விடை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தேன்.

இதற்குப் பதிலளித்த கருணாநிதி, இப்போதுள்ள மசோதா பல்வேறு கட்சியினரும் தெரிவித்துள்ள முக்கியத் திருத்தங்களைத் தாங்கி வருமேயானால் தி.முக. அதனை ஆதரிக்கும் எனவும், திருத்தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தி.மு.க. எதிர்க்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதோடு, இந்த மசோதா சட்டமானால் தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொது விநியோகத் திட்டத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் தி.மு.க. உறுதியோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்துக்கு வழங்கப்படும் அரிசி மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்குக் குறையும் எனவும், இதை ஈடு செய்ய கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் எனவும், இதற்கான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரியிருந்தேன்.

என்னுடைய தொடர் வலியுறுத்தல்களுக்குப் பிறகு, மாநிலங்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் அரிசியின் அளவு குறைக்கப்படாது என்ற திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

விலையைக் குறிப்பிடாதது ஏன்?

அதே சமயத்தில், ஆண்டுக்கு 21.88 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோவுக்கு ரூ.3 வீதத்தில் வழங்க வகை செய்துள்ள மத்திய அரசு, மீதமுள்ள 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கான விலையை திருத்தத்தில் குறிப்பிடவில்லை. இது மிகவும் வேதனை அளிக்கும் செயலாகும்.

முன்பு என்ன விலைக்கு மத்திய அரசு கொடுத்ததோ, இந்த 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் அதே விலைக்கு (கிலோ ரூ.3) வழங்கினால்தான் தமிழகத்தின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாகக் கருத முடியும். குறைந்தபட்சம் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கான வழங்கப்படும் விலையான கிலோவுக்கு ரூ.8.30 என்ற விலைக்காவது வழங்க வேண்டும். கொள்முதல் விலையான கிலோவுக்கு ரூ.19.11 என்ற விலையில் வழங்கினால், தமிழகத்துக்குக் கூடுதலாக ரூ.1,000 கோடி செலவு ஏற்படும்.

தமிழ்நாட்டில் இப்போது உணவு தானியங்களை விலையில்லாமலும், மானிய விலையிலும் வழங்க தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவு ஏற்படுகிறது. அ.தி.மு.க.வைப் பொருத்தவரை, இப்போது வழங்கப்படும் அரிசியின் அளவு மட்டுமல்ல, விலையும் தொடர வேண்டும்.

சூழ்ச்சி

இப்போதைய திருத்தத்தின்படி, 14.90 லட்சம் மெட்ரிக் டன் அரிசிக்கான விலையை மத்திய அரசு குறிப்பிடாதது ஒரு சூழ்ச்சியே ஆகும். மானிய விலையில் 10 ஆண்டுகளுக்கு உணவு தானியங்களை வழங்க வேண்டும், நகர்ப்புறங்களில் உள்ள அனைவரும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

இதை எடுத்துக் கூறி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளேன். இந்தச் சூழ்நிலையில், உணவுப் பாதுகாப்பு மசோதாவை தற்போது கொண்டு வந்துள்ள திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. இதர திருத்தங்களையும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நாடாளுமன்றத்தில் மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களிக்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தி.மு.க. ஆதரித்தால்...

தமிழக மக்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்த தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை தி.மு.க. ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் தமிழகத்துக்குப் பயன் அளிக்காது. இன்னமும் தமிழக மக்களுக்கு எதிரான, தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்த மசோதாவை கருணாநிதி ஆதரித்தால், அது தமிழக மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்," என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

உணவுப் பாதுகாப்பு மசோதா மீது பாராளுமன்றத்தில் திங்கள்கிழமை (இன்று) விவாதம் நடைபெறவுள்ளது.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa, a harsh critic of the National Food Security Bill, on Sunday declared that her party would support the Bill if the Centre agreed to incorporate all the amendments she had suggested. She also wanted the Centre to announce the price at which it would supply nearly 15 lakh tonne rice to the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X