For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நவநீதம் பிள்ளை வருகையால் தமிழருக்கு நீதி கிடைக்கட்டும்- வைகோ

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் பயணத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கட்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:''இலங்கையின் சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைத் தாக்குதல்கள், மனித உரிமைகள் அழிப்புக் குற்றங்கள் குறித்து, அனைத்து உலக மன்றத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ள சூழலில், இலங்கையில் நேரடி ஆய்வு விசாரணை நடத்துவதற்காகச் சென்று இருக்கின்ற, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் முயற்சியை வரவேற்கிறோம்.

சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றங்கள் குறித்து, துணிச்சலாகவும், நேர்மையாகவும், கருத்துகளைக் கூறுகின்ற நவநீதம் பிள்ளைக்கு, தமிழ்க் குலம் நன்றி கூறுகிறது. அவரது ஆய்வுப் பயணத்துக்கு, சிங்கள இனவெறியர்களும், புத்த சாமியார்களும், ராஜபக்சே அரசின் தூண்டுதலால் எதிர்ப்பும் கண்டனமும் காட்டி வருகிறார்கள்.

நல்லிணக்க ஆணைய பரிந்துரைகளுக்கான பயணமா?

நல்லிணக்க ஆணைய பரிந்துரைகளுக்கான பயணமா?

2008ல், இலங்கை பிரச்னையை கண்காணிக்கின்ற ஐ.நா. குழுவில், மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை, ஐ.நா. பொதுச்செயலாளரின் ஆலோசகர் விஜய் நம்பியார் உள்ளிட்டவர்களால் நிராகரிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன், நவநீதம் பிள்ளையின் பயணம் அமையும் என்றால், அது தமிழர்களுக்கு எவ்விதத்திலும் நீதியை வழங்காது. தமிழர்களால் முற்றிலும் நிராகரிக்கப்படும் என்பதை, கனத்த இதயத்தோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்னும் தொடரும் கொடுமை

இன்னும் தொடரும் கொடுமை

2009 மே மாதத்துக்குப் பின்னரும், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்கும், கொடுந்துன்பத்துக்கும், சித்திரவதைக்கும் ஆளாகி வருகிறார்கள் என்பதுதான் உண்மையிலும் உண்மை ஆகும். செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, வழிபாட்டுத் தலங்களைத் தகர்க்கின்றார்கள், தமிழர் தாயகம் சிங்கள மயமாக்கப்படுகிறது, இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்படுவதும், ஏராளமானோர் விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

2007ல் இலங்கைக்குச் சென்ற, சர்வதேச நீதிபதிகள் குழுவின் தலைவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி அவர்கள், ‘இலங்கையின் நீதி பரிபாலனம் என்பது, நேர்மை அற்றது. அனைத்து உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட நீதியின் அடிப்படைகளைக் கூடக் கடைப்பிடிக்க முடியாதது. இலங்கையில் சாட்சிகளுக்கான பாதுகாப்பே கிடையாது' என்று பதிவு செய்ததை, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

தமிழர் பிரதிநிதிகளைச் சந்தியுங்கள்

தமிழர் பிரதிநிதிகளைச் சந்தியுங்கள்

ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர், தமிழர்களின் பிரதிநிதிகள், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், நிலங்களை இழந்தவர்கள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரையும், யுத்தத்தில் தமிழ்ப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்துப் பதிவு செய்ய விரும்பும் மகளிர் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று, துயரத்தில் தவிக்கும் தமிழர்கள் சார்பில் வேண்டுகிறேன்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில், தமிழர் தாயகத்தை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இருப்பது, தமிழர் பகுதிகளைச் சிங்கள மயமாக்குதல், சிங்களச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள், கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், தமிழர் தாயகத்தில் நிலை கொண்டு உள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும், உலகுக்குத் தெரியப்படுத்திட, மனித உரிமைகள் ஆணையர், முன்வர வேண்டுகிறேன்.

தமிழர் பகுதிகளில் சிங்களமயம்

தமிழர் பகுதிகளில் சிங்களமயம்

மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தடுக்கும் ராணுவ அடக்குமுறைகள், இறந்தவர்களின் கல்லறைகளையும், புதைக்கப்பட்ட இடங்களையும் அழித்து, அங்கே சிங்கள இராணுவத்துக்கான கட்டடங்களைக் கட்டுதல், வெற்றித்தூண்களை நிறுவுதல், யுத்த அருங்காட்சியகம் அமைத்தல், தமிழர் மடிந்த பகுதிகளில் கேளிக்கை விடுதிகள் கட்டுதல், இவை அனைத்தையும் குறித்து, விசாரணை நடத்தி, மனித உரிமை ஆணையர், உலகுக்கு அறிக்கை தர வேண்டுகிறேன்.

முருகதாசன் கடித வரிகள்

முருகதாசன் கடித வரிகள்

தமிழ் மக்களின் மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்து உள்ள ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு, 2009 பிப்ரவரி 12 ஆம் நாள், ஜெனீவா ஐ.நா. அலுவலகம் முன்பு, தீக்குளித்து மடிந்த மாவீரன் முருகதாசன் எழுதிய கடிதத்தின் வரிகளை நினைவுக்குக் கொண்டு வருகிறேன்.

‘சிங்கள அரசு, எமது தமிழ் மக்களுக்குச் செய்து வந்த கொடுமைகள், நீண்ட துன்பியல் வரலாற்றைக் கொண்டது. அதன் நிகழ்காலப் பரிமாணமாகவே, தமிழ் மக்களின் பிரச்னையில், உலக நாடுகளின் தலையீடும் ஏற்பட்டது. இதன் விளைவாக, நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள். நானும் அதை நம்பினேன். ஆனால், நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்கிறோம். எமது மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டதற்கும், சிங்கள அரசுடன் சேர்ந்து, இணைத் தலைமை நாடுகள், இன அழிப்புக்குத் துணை போனதற்கும் சாட்சியாக, ஐ.நா. மன்றத்தின் முன், இந்தத் தமிழன் முருகதாசன் தீக்குளித்தான் என்ற வரலாறும் சேரட்டும்.

ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நீதி கிடைக்கச் செய்வதில், ஐ.நா. வின் பங்கு எவ்வாறானது என ஆய்வு செய்யப்படும் போது, ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் சார்பாக, இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்தான் என்ற வரலாறும் சேரட்டும்' என்று தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

நீதியின் வெளிச்சம்

நீதியின் வெளிச்சம்

இந்தத் தியாகத்தை மனதில் கொண்டு, தங்கள் தாயக விடுதலைக்காக, இனக்கொலைக் களத்தில் பலியான, 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழ் ஈழத்தின் விடுதலைக்கான, பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கும், இலங்கை அரசு மீது, இனப் படுகொலைக்கான விசாரணையை, ஐ.நா.மன்றமும், அனைத்து உலக நாடுகளும் மேற்கொள்வதற்கும், நீதியின் வெளிச்சம் தமிழர்களுக்கு நிரந்தரமாகக் கிடைப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், இப்போதைய பயணத்தின் மூலம், மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை நிறைவேற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்,'' எனக் கூறியுள்ளார்.

English summary
MDMK chief Vaiko hoped that UNHRC commissioner Navaneetham Pillai's visit may bring light of Justice for Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X