For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கைக்கு போர்க் கப்பல் வழங்குவதா?: ராமதாஸ் எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்து இந்தியாவுடன் அறிவிக்கப்படாத போரை இலங்கை நடத்தி வரும் நிலையில் இலங்கைக்கு போர்க் கப்பல்களை இந்தியா வழங்கினால் தமிழ்நாடு கொந்தளிக்கும்" என்று மத்திய அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிவடைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்படவில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் வீடின்றி, வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வடக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களை ராணுவக் காவலில் வைத்து கொடுமைப்படுத்தி வருகிறது. இது பற்றி விசாரிப்பதற்காக இலங்கை சென்ற ஐ.நா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை பெண் புலி என்றும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளத் தயார் என்றும் கூறி இலங்கை அமைச்சர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்.

உணர்வுகளுக்கு மதிப்பு

போர்க் குற்றம் பற்றி விசாரிக்கச் சென்ற ஒரு பெண்மணியை அவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக இழிவுபடுத்திய இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை பரிசளிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அமைந்திருக்கிறது.

2 போர்க்கப்பல்கள்

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்து இந்தியாவுடன் அறிவிக்கப்படாத போரை இலங்கை நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் இலங்கையின் கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அந்த நாட்டிற்கு போர்க்கப்பல்களை வழங்கப் போவதாக மத்திய அரசு கூறுவது வேதனை அளிக்கும் நகைச்சுவையாக உள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தலா?

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கைக்கு அருகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் இல்லை. இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை இந்திய கடற்படை கவனித்துக் கொள்கிறது. இந்தநிலையில் இலங்கை கடல்பகுதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்கமுடியாது.

தமிழர்களை அழிக்க

இதற்கு முன்பு கடந்த 2007ஆம் ஆண்டில் இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான சி.ஜி.எஸ். வராஹா, சி.ஜி.எஸ். விக்ரஹா என்ற இரு போர்க்கப்பல்களை இலங்கைக்கு இந்தியா குத்தகைக்கு வழங்கியது. 2009ஆம் ஆண்டு போரின் போது தமிழினத்தை வீழ்த்துவதில் இந்த இரு கப்பல்களும் முக்கிய பங்கு வகித்தன.

மீனவர்களுக்கு ஆபத்து

இப்போது இலங்கைக்கு எந்த விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், இலங்கைக்கு போர்க்கப்பல்களை இந்தியா வழங்குவது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மட்டுமே பயன்படும். தனது சொந்த நாட்டு மீனவர்களை தாக்குவதற்காக கொலைகார அண்டை நாட்டிற்கு போர்க்கப்பல்களை வழங்கிய நாடு என்ற அவப்பெயருக்கு இந்தியா ஆளாகிவிடக்கூடாது. இந்தியா மீது கடல்வழியாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இலங்கை துணை போவதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டிற்கு போர்க்கப்பல்களை வழங்கினால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தான் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

நாடு கொந்தளிக்கும்!

எனவே, இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக போர்க்கப்பல்களையும், ஆயுதங்களையும் வழங்குவதையும் தொடர்ந்தால் மத்திய அரசு அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has warned the Indian govt for its decision of giving two war ships to Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X