• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளரும் பிறையே தேயாதே.. இனியும் அழுது தேம்பாதே.. 33 வருஷமாச்சு.. நாயகன்!

|

"தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவனை
யார் அடித்தாரோ
யார் அடித்தாரோ

வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே"

33 years of Nayagan

"அலெக்ஸ்... நாயகன் போலாமா.. தீபாவளிக்கு வருது"

"சும்மா இருடா.. கைல காசு இல்லை.."

"உங்கப்பா கிட்ட கேளுடா.. நானும் கேட்கிறேன்.. "ஹெர்பேரியம்" ரெடி பண்ணனும்.. ஸ்கூல்ல கேக்கறாங்கன்னு சொல்லு.. தருவாங்க.. டிரை பண்ணு.. கமல் படம்டா.. ப்ளீஸ்"

"சரி பண்றேன்.. ஆனால் உறுதியாச் சொல்லமுடியாது.. இப்ப கேட்டா பிறகு கிறிஸ்துமஸுக்குத் தர மாட்டாங்க... எனக்கு கிறிஸ்துமஸ்தான் முக்கியம்.."

"போடா போடா.. கிறிஸ்துமஸுக்கு நான் எப்படியாச்சும் தேத்தி தர்றேன்டா.. இதுக்கு மட்டும் நீ டிரை பண்ணு"

33 வருஷத்துக்கு முன்னாடி.. பிளஸ் 1 மாணவர்கள் ரெண்டு பேர்... பிசிக்ஸ் வகுப்பின்போது குசுகுசுவென பேசிக் கொண்ட உரையாடல் இது... அவர்கள் மட்டுமா புளகாங்கிதமடைந்தனர்.. அவர்களைப் போல லட்சக்கணக்கானோரை பிரித்து மேய்ந்த படம்தான் "நாயகன்".

33 years of Nayagan

அதற்கு முன்பும் கூட நிறைய டான் படங்களைப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் நாயகன் படம் போல ஒரு டான் படம் வந்தது இல்லை.. பில்லா என்று எடுத்துக் கொண்டால் அந்த டான் வடிவம் ரொம்ப ஸ்டைலிஷ்.. துப்பாக்கியை எடுத்தோமா சுட்டோமா என்று கூலாக போய்க் கொண்டே இருப்பான் பில்லா.. ஆனால் நாயகன் அப்படி இல்லை.. அடிபட்டு உதை.. கண்ணு வீங்கும்.. கால் காலியாகும்.. நாயகன் பாஷையில் சொல்வதானால்.. "சாவணும்".

ஒரு சாமானியன் எப்படி தாதாவாகிறான் என்பதைச் சொன்ன படம்தான் நாயகன். சாதாரண ஒரு கோபக்கார இளைஞனை தூண்டி விட்டால் அவன் என்னாவான் என்பதுதான் இந்தக் கதையின் அடி நாதம். அதை விட முக்கியமாக, அடி வாங்கிக் கொண்டே இருப்பவன் திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்னாகும் என்பதையும் ரொம்பத் தெளிவாக, அழகாக சொன்ன படம் நாயகன்.

கமல்ஹாசனின் நடிப்பா.. மணிரத்தினத்தின் இயக்கமா.. இளையராஜாவின் இசையா.. என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பட்டையைக் கிளப்பிய படம்தான் நாயகன்.. ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டிருக்கும். மணிரத்தினம் படங்களிலேயே மிக மிக தெளிவாக எடுக்கப்பட படம் இதுதான்.. காரணம் இளையராஜாவும் சரி, கமல்ஹாசனும் சரி ஒவ்வொரு சீனிலும் தங்களது இருப்பை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். அதனாலேயே ஒட்டுமொத்த படமும் பெஸ்ட்டாக வந்திருக்கும்.

பாலகுமாரன் என்ற மாமேதை இந்தப் படத்தில் வசனத்தில் புகுந்து விளையாடியிருப்பார். எல்லோரும் மேற்கோள் காட்டும் " நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா" என்ற வசனம் பட்டி தொட்டியெங்கும் அப்போது ரீச் ஆகி நாயகனை தூக்கி வைத்துக் கொண்டாடியது.. "நாலு பேர் சாப்பிட உதவும்னா எதுவுமே தப்பில்லை" என்ற வசனத்தை இன்று வரை பலரும் சொல்லி சிலாகிக்கிறார்கள். படத்தில் பேசப்பட்ட வசனமாக இல்லாமல், சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட மெசேஜ் ஆக அது போய்ச் சேர்ந்தது.

"நான் அடிச்சா நீ செத்துருவ"

"நாலு காசு சம்பாதிக்கனும்னா சாவனும், சம்பாரிச்ச காசை வீட்டுக்கு கொண்டாறதுக்குள்ள ரத்த அடிபடனும். ஒரு நாளைக்காவது ராத்திரி வரைக்கும் நாம உயிரோட இருப்போம்னு நம்பிக்கை உண்டா? இல்லை"

33 years of Nayagan

இவையெல்லாம் வசனம் இல்லை.. ஒவ்வாொரு சாமானியனின் குடும்பத்திலும் உலவிக் கொண்டிருந்த வறுமைச் சூழலை அப்பட்டமாக எடுத்துக் காட்டிய வசனம் இது. நாயகன் படத்துக்காக கமலும், இளையராஜாவும், மணிரத்தினமும் மட்டுமல்ல.. பாலகுமாரனும் கூட கொண்டாடப்பட்டார். "எழுத்துச் சித்தர்" அனுபவித்து எழுதிய வரிகள் இவை.

நாயகன் படத்தை ஒரு சாதாரண பொழுது போக்குச் சித்திரமாக சுருக்கி விட முடியாது.. அனைத்தும் நிறைந்த அற்புதமான பேக்கேஜ் அது.. வறுமை உண்டு.. குரோதம் உண்டு.. நம்பிக்கை துரோகம் உண்டு.. நட்பு உண்டு.. காதல் உண்டு.. காமம் உண்டு.. கருத்து உண்டு.. ரத்தம் உண்டு.. போராட்டம் உண்டு.. வாழ்க்கை உண்டு.. எதுதான் இல்லை.

கமல்ஹாசனை சற்றே ஒதுக்கி விட்டுப் பார்த்தால்.. ஜனகராஜ் மனசை விட்டு அகலாமல் அழுத்தமாக நின்றிருப்பார்.. தனது பிரமாதமான நடிப்பால்.. இப்படி ஒரு நண்பன் "பேக்கப்"பாக கிடைத்தால் எவன்தான் பின்னிப் பெடலெடுக்க மாட்டான். சரண்யாவுக்கு அதுதான் முதல் படம்.. ஆனால் அபாரமாக நடித்திருப்பார்.. அற்புதமான கதாபாத்திரம்.. நிழல்கள் ரவியின் கதாபாத்திரம் சுருக்கமானது.. ஆனால் அவரைத் தவிர வேறு யாரையும் அந்த ரோலில் பொருத்திப் பார்க்க முடியாது. நிறைவாக கொடுத்திருப்பார். இன்னும் நிறையப் பேரைச் சொல்லலாம்.. டினு ஆனந்த்.. "பாபா மர்கயா"வை மறக்க முடியுமா!

நாசருக்கு முக்கியமான படமாக நாயகன் இன்று வரை உள்ளது. மூக்கு விடைத்த அந்த இறுக்கமான போலீஸ்காரன் கேரக்டரில் அழுத்தம் காட்டியிருப்பார். கடைசியில் அந்த போலீஸ்காரனுக்குள் எட்டிப் பார்த்த நெகிழ்ச்சிதான்.. அவரது நடிப்பின் முதிர்ச்சி. அதுவரை சாதாரணமாக நடித்துக் கொண்டிருந்த நாசர்.. நாயகனுக்குப் பிறகுதான் வித்தியாசமான வேடங்களில் களை கட்ட ஆரம்பித்தார்.

பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி கதையை ஓவர் டேக் செய்யாமல், நடிகர்களை ஓரம் கட்டாமல் அப்படியே அவற்றின் போக்கோடும், ஓட்டத்தோடும் இணைந்து இயைந்து போனது இளையராஜா என்ற மாயாஜால மனிதரால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒரு வித்தை. இப்படத்தின் இசைக்காகவே படம் ஓடியதா என்று கூட சந்தேகிக்க வைத்தது. அப்படி ஒரு பின்னணி இசையில் ராஜாங்கமே நடத்தியிருப்பார் இளையராஜா. மணிரத்தினத்துக்கென்று தனி டச்சுடன் ராஜா இசையமைத்துக் கொடுத்த பொற்காலம் அது.

33 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 21, 1987) நாயகன் திரைக்கு வந்து ரசிகர்களைக் கட்டிப் போட்டது. அதற்கு முன்பும் இப்படி ஒரு இயல்பான டான் கதை வரவில்லை. அதற்குப் பின்னும் கூட நிறையப் பேர் காப்பி அடித்துப் பார்த்தார்கள்.. ஆனால் எதுவுமே தேறவில்லை. இத்தனை வயதாகியும் கூட இன்று வரை நாயகன் கொடுத்த ஈர்ப்பும், இயல்பும் அப்படியேதான் உள்ளது. படம் பார்க்காத இன்றைய தலைமுறை நிச்சயம் பார்க்க வேண்டிய படங்களில் நாயகனுக்கும் ஒரு இடம் உண்டு.

English summary
Kamal Hassan's masterpiece Nayagan has turned 33 years today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X