அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக தொழில் துறை அமைச்சரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
அபுதாபி: அபுதாபி சாம்பர் ஆப் காமர்ஸில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் துறை அமைச்சர் டாக்டர் சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின், அவருடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வரின் தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் சென்றுள்ளார்கள்.
இந்த நிலையில் துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை கவுரவிக்க அங்குள்ள உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலீபா டவரில் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள், பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

தாஜ் ஹோட்டல்
இதையடுத்து துபாயில் உள்ள தாஜ் ஹோட்டலில் முதல்வர் ஸ்டாலின் ,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர்களை சந்தித்து பேசினர். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாகவும் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து முதல்வர் விளக்கினார்.

1600 கோடி ரூபாய்
இதையடுத்து தமிழகத்தில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன் கையெழுத்தானது. இதையடுத்து துபாயில் உள்ள தமிழர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேலும் கடல் கடந்து சென்று கை நிறைய முதலீடுகளை பெற்றேன் என துபாயில் இருந்த படியே முதல்வர் கடிதம் எழுதியிருந்தார்.

அபுதாபி
இதையடுத்து அபுதாபிக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொள்கிறார். அபுதாபியில் முபதாலா டர்வர்ஸையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அது போல் அபுதாபியிலும் முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார்.

அமைச்சருடன் சந்திப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில் துறை அமைச்சர் டாக்டர் சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபரை அபுதாபியில் உள்ள சாம்பர் ஆப் காமர்ஸில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அமைச்சர் ஜாபருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். உடன் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இருந்தார்.