• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் திட்டத்தால் கிராமப் பொருளாதாரம் புத்துயிர் பெற வாய்ப்பு

சென்னை: சொந்த நிலம் இல்லாத விவசாயப் பிண்ணனி கொண்ட ஏழ்மைநிலையில் இருக்கும் கிராமப்புற மகளிரைத் தேர்ந்தெடுத்து அக்ரோடெக் என்னும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் இலவச ஆடுகளை வினியோகித்து வருகிறது. மத்திய அரசின் பங்களிப்போடு கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்த முயற்சி கிராமப்புற மகளிர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் கிராமத்தில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு தலா இரண்டு ஆடுகள் வீதம் இலவசமாக இன்று வினியோகிக்கப்பட்டது. இந்த ஆடுகளை விவசாயத்தில் ஆர்வமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் இருக்கும் மகளிர் வளர்த்து அதன் மூலம் தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ளலாம். இதில் பயிற்சி முதல் விற்பனை வரை அனைத்து விசயங்களுக்கும் செயலிகளின் வழியே ஆலோசனையும் கூறுகிறார்கள். விவசாயிகளை விற்பனையாளராகவும் மாற்றும் பயிற்சியும் இதில் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பங்களிப்போடு முழுக்க இலவச சேவையாகவே இது மேற்கொள்ளப்படுகிறது.

Agrotech pioneers in Goat rearing in Tamilnadu

இதுகுறித்து நம்மிடம்பேசிய அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் கூறுகையில், ''இந்தியாவில் நிலமற்ற ஏழை, எளிய மகளிர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரமும் உயரும். இதை செயல்படுத்தும்வகையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் பல்வேறு விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்துக்கும் வழிகாட்டியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் இதை செயல்படுத்திவருகிறோம்.

இதில் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவும் கவனமுடன் இருக்கிறோம். அதற்கு சில நிபந்தனைகளும் உண்டு. சொந்த நிலம் இருக்கக் கூடாது. கிராமப்பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் மகளிராக இருக்க வேண்டும். அதில் விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களை சேர்ந்து மகளிர்குழுக்களாக கட்டமைக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பெண் ஆடுகளை இலவசமாகக் கொடுப்போம். நாங்கள் கொடுக்கும்போதே நன்கு வளர்ந்தநிலையில் இருக்கும் அந்த ஆடுகள் ஒவ்வொன்றுமே 5 ஆயிரம் வரை விலை அளவுள்ள நிலையில் இருக்கும். விவசாயிகளை பொறுத்தவரை அவர்கள் நல்ல உற்பத்தியாளர்களாக இருப்பார்கள். ஆனால் நல்ல வியாபாரிகளாக இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை உருவாக்குவதுதான் எங்கள் நோக்கம்.

தமிழக அரசின் இலவச ஆடு வினியோகிக்கும் திட்டத்தில் இருந்து இது முற்றாக மாறுபட்டது. இதில் ஒரு மகளிர் ஆட்டை பெறும்போதே எங்கள் நிறுவனத்தில் உறுப்பினர் ஆகிவிடுகிறார். நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களை வளர்ச்சியடைய வைக்க தொடர்வோம். எங்கள் வழிகாட்டுதல்படி ஆடுகளை வளர்த்துவந்தால் ஒரு பெண் ஆட்டில் இருந்து 60 ஆடுகளாக அவர்கள் உருவாக்க முடியும். அந்த நிலையை அடைவதற்கான பயிற்சி வகுப்புகள், இனப்பெருக்க காலம் குறித்த தகவல்கள், சத்தான தீவனம் வழங்குதல் ஆகியவற்றையும் கண்காணித்து வழிகாட்டுவோம். ஒரு பயனாளியின் ஆடு குட்டிப் போட்டு அது ஆணாக இருக்கும்பட்சத்தில் அதை வாங்கிவிட்டு அதற்குப் பதிலாக பெண் ஆட்டைக் கொடுத்துவிடுவோம். ஆடுகளை அவர்களது நெருக்கடியான காலத்தில் விற்க நேர்ந்தால் அவர்களுக்கு எடைக்கு ஏற்ற சரியான விலை கிடைக்கவும் உதவுகிறோம்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கிராமப்புற மகளிரின் பொருளாதாரத்துக்கு ஆடு வளர்ப்பே பெரிதும் கைகொடுக்கிறது. தமிழகத்தில் கிராமப்புற மகளிருக்கு ஆடுவளர்ப்பின் முக்கியத்துவம் இன்னும்கூட பரவலாகத் தெரியவில்லை. சீனி, கொடி, கன்னிரக நம் பாரம்பர்ய ஆடுகளை வழங்குகிறோம். அதனால் இந்த தட்பவெட்ப சூழலுக்கு அவை நன்றாக வளரும். இந்த ரக ஆடுகள் ருசியாக இருப்பதால் சந்தை வாய்ப்பும் அமோகமாக இருக்கும். ஆடு வளர்ப்புக்கான பயிற்சிமுகாம், எடைக்கு தகுந்த விலை கிடைக்கச் செய்வது ஆகியவற்றையும் ஆன்லைன் வழியே சாத்தியப்படுத்துகிறோம். கூகுள் ப்ளே ஸ்டோரில் இவைகளுக்கு என்று பிரத்யேக செயலிகளை அமைத்துள்ளோம்.

இன்று கிராமப்புற விவசாயிகளிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. வாட்ஸ் அப், முகநூல் என அவர்களும் சமகால ஓட்டத்துக்கு இணையாக இருக்கிறார்கள். அதற்குள் இருக்கும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பைக் காட்டுகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், நாகர்கோவில், பாண்டிசேரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இலவச ஆடுகள் வினியோகித்திருக்கிறோம். கிராமப்புற மகளிரில் விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள் எங்களத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆடு வழங்கவும், அவர்களை பொருளாதாரத்தில் மேம்படுத்த இலவச பயிற்சியும் வழங்க தயாராக உள்ளோம்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி இரண்டு ஆடுகளையும் வளர்த்துவந்தால் மூன்றாவது வருட இறுதியில் 3 லட்ச ரூபாய் மதிப்பில் ஆடுகள் ஒவ்வொரு பயனாளியிடமும் இருக்கும். இந்த திட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் கரோனாவால் சரிந்திருக்கும் கிராமப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்.''என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X