3 பேருக்கு கொரோனா இருந்தாலே கட்டுப்பாடு மண்டலம்.. அப்பார்ட்மெண்ட் கட்டிடங்களுக்கு புதிய உத்தரவு
பெங்களூரு: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு மண்டலம் தொடர்பாகப் பெங்களூரு மாநகராட்சி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் இதே நிலை தான். குறிப்பாக தற்போது, நாட்டில் உள்ள அனைத்து பெருநகரங்களிலும் வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தனிமைப்படுத்துதல் தொடர்பாக பெங்களூரூ மாநகராட்சி புதிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி எந்தவொரு அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திலும் மூன்று பேருக்கு மேலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்டிடம் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 7 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பார்ட்மெண்ட் டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்ட அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் பரவல் காரணமாக நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் 2 லட்சத்தை எட்டியுள்ளது.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய பிரதமர் மோடி, "ஓமிக்ரான் உருமாறிய கொரோனா முந்தைய வகைகளை விடப் பல மடங்கு வேகமாகப் பரவி வருகிறது. நாம் அனைவரும் இப்போது நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் மக்கள் அச்சப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பண்டிகைக் காலத்தில் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.