ஓசூருக்கு மெட்ரோ ரயில்! ட்விஸ்ட் செய்கிறதா கர்நாடகா? பெங்களூர் மெட்ரோ ரயில் அதிகாரி விளக்கம்!
பெங்களூர்: பெங்களூர்-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராயவே தமிழக அரசுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தலையிடாது என அதன் அதிகாரி கூறியுள்ளார். மேலும் சிலர் மெட்ரோவை விட புறநகர் ரயில் திட்டம் தான் சிறந்தது என கூறுகின்றனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது. இந்த மெட்ரோ ரயிலை தமிழ்நாடு வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதாவது பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்தால் கர்நாடகம், தமிழக மக்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் என வலியுறுத்தப்பட்டது.
மகிழ்ச்சி! நனவானது கனவு திட்டம்.. பெங்களூர்-ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கர்நாடக அரசு ஒப்புதல்!

ஓசூர் வரை மெட்ரோ
தினமும் கர்நாடகம்-தமிழக எல்லையான ஓசூரில் இருந்து ஏராளமானவர்கள் பெங்களூரில் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். அதேபோல் பெங்களூரில் இருந்து திரளானவர்கள் ஓசூர் வந்து செல்கின்றனர். இதனால் இந்த கோரிக்கை நீண்ட காலமாக வலுத்து வந்தது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமாரும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் மக்களவையில் இதுபற்றி பேசினார். இந்நிலையில் தான் பெங்களூர் மெட்ரோ ரயில் சேவையை பெங்களூரின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சகத்துக்கு முன்மொழிவு
அதன்படி பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து 20.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைத்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இதில் 11.7 கிலோமீட்டர் தூரம் கர்நாடகத்திலும், மீதமுள்ள 8.8 கிலோமீட்டர் தொலைவு தமிழகத்தில் அமையும். இதுபற்றி எம்பி செல்லகுமார் கூறுகையில், ‛‛மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆய்வு நடத்த வேண்டும் என கர்நாடக அரசு கேட்டு கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு மே 23ல் பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்மொழிவு ஒன்றை அனுப்பியுள்ளது. விரைவில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளேன். மேலும் விரிவான திட்ட அறிக்கையை வழங்ககோரி கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்'' என்றார்.

மக்கள் வரவேற்பு
இதுபற்றி ஓசூர் தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜகோபாலன் கூறுகையில், ‛‛மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டிப்பு செய்வது என்பது வரவேற்கத்தக்கது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெங்களூர்-ஓசூர் இடையே சென்று வரும் நிலையில் இது நல்ல பலன் கொடுக்கும். மேலும் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்தும்'' என்றார். பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி தொழில் டவுடன்ஷிப் ஆணையத்தின் சிஇஓ ரவீந்திர சிங் கூறுகையில்,‛‛பெங்களூர்-ஓசூர் இடையேயான மெட்ரோ சேவை தொடங்கினால் சாலையில் போக்குவரத்து குறையும். மேலும் மெட்ரோ சேவை சுற்றுச்சூழலை அதிகம் மாசுப்படுத்தாது. இதனால் இத்திட்டம் வரவேற்கத்தக்கது'' என்றார். மேலும் மக்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

சாத்தியக்கூறுகளை ஆராயவே...
இதுபற்றி பெங்களூர் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறியதாவது: மெட்ரோ ரயிலை ஓசூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவே கர்நாடகத்தின் தரப்பின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பெங்களூர் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தலையிடாது. எங்களின் முக்கிய பணி என்பது பெங்களூர் நகர மாவட்டத்தில் மெட்ரோ இணைப்புகளை ஏற்படுத்துவது தான். மெட்ரோவின் முதல் முக்கியத்துவம் என்பது பெங்களூர் நகரின் அனைத்து பகுதிகளையும் இணைப்பது தான். மேலும் அரசு சார்பில் புறநகர் ரயில் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகிறது.

புறநகர் ரயில் திட்டம்
இதற்கிடையே பெங்களூர் ஹிலலிகே-எலகங்கா-ராஜனகுண்டே இடையேயான புறநகர் ரயில் காரிடார் மற்றும் பையப்பனஹள்ளி-ஓசூர் இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2024ல் முடிவடைய உள்ள நிலையில் கர்நாடக ரயில் வேதிகே நிறுவன உறுப்பினர் கிருஷ்ணபிரசாத் கூறுகையில், ‛‛மெட்ரோவை விட புறநகர் ரயில் சேவை தான் ஓசூருக்கு அதிக பலன் அளிக்கும். இதனால் ஹீலலிகேவில் இருந்து ஓசூருக்கு புறநகர் திட்டத்தை நீட்டிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

புறநகர் ரயில் திட்டம் தான் சிறந்ததா?
இதுபற்றி போக்குவரத்து சார் நிபுணரான சஞ்சீவ் தியாமன்னார் கூறுகையில், ‛‛ஒரு கிலோமீட்டர் தொலைவிலான புறநகர் ரயில் திட்ட பணிகளுக்கு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி செலவாகலாம். ஆனால் மெட்ரோ திட்ட பணிக்கு இது ரூ.300 கோடியாக இருக்கும். மேலும் மெட்ரோவுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு நிறுத்தம் அமைக்க வேண்டும். இது புறநகர் ரயில் திட்டத்தில் 4 முதல் 5 கிலோமீட்டருக்கு ஒரு நிறுத்தம் அமைக்கலாம். மேலும், அடுத்தடுத்த நிறுத்தங்களால் மெட்ரோவின் வேகம் குறையும். அதோடு மட்டுமின்றி மெட்ரோ பயணிகளில் 30 சதவீதத்தினர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். 70 சதவீதத்தினர் நின்றபடி தான் பயணிக்க வேண்டும். அதோடு மெட்ரோவில் குறிப்பிட்ட அளவு மட்டுமே லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். இதனால் புறநகர் ரயில் திட்டம் தான் பெங்களூர்-ஓசூர் இடையே சிறந்தது'' என்றார்.