அசானி புயலால் ஊட்டியாக மாறிய பெங்களூர்! ஜில் வானிலையால் மகிழ்ந்த மக்கள்! 22 வருடத்தில் இல்லாத குளிர்
பெங்களூரு : அசானி புயலின் தாக்கத்தால் பெங்களூரில் நேற்று மேகமூட்டமான வானிலையுடன் லேசான மழை பெய்த நிலையில், 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை 24.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததால் பெங்களூரு நகரம் குளிர்ச்சியுடன் காணப்பட்டது.
கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்த நிலையில், நேற்று முன்தினமும் பகலில் வெயில் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் இரவில் மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மிரட்டும் அசானி... சென்னையில் கொட்டும் மழை... வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்

அசானி புயல்
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக தலைநகர் பெங்களூருவில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள் ஒன்றுகூடி இருள் சூழ்ந்ததால் நகரில் குளிர் காற்று வீசியது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. நகரின் ஒரு சில இடங்களில் மழை சற்று பலமாகவும் இருந்தது. இது கோடை காலமா இல்லை குளிர்காலமா என்று மக்கள் ஆச்சரியமாக கேட்டுக்கொள்ளும் வகையில் தட்பவெப்ப நிலை இருந்தது.

கடும் குளிர்
நகரத்தில் 3.5 மிமீ லேசான மழை பெய்துள்ள நிலையில், பலத்த காற்று மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியஸிலிருந்து 20.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. இதனால் குளிர் அதிகமாக இருந்தாலும் கோடைக்காலத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு நிலவிய வானிலையை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை மையம் கணித்துள்ளது.

மிகக் குறைந்த வெப்பநிலை
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 26 டிகிரி செல்சியஸ் மற்றும் 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவின் தென்பகுதியில் ஒரு சில இடங்களிலும், கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வட கர்நாடகத்தின் உள்பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கலபுர்கியில் 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

நல்ல மழை
அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 27 டிகிரி செல்சியஸ் மற்றும் 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அசானி புயல் புதன்கிழமை இரவு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் மோக மூட்டத்தால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

பெங்களூரு வானிலை ஆய்வு மையம்
குடை கொண்டு வராத மக்கள் மழையில் நனைந்தபடி சென்றதையும் காண முடிந்தது. இந்த மழைக்கு ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. அதேநேரம் பலத்த மழை காரணமாக ராஜகால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெயில் பாதிப்பு குறைந்து காணப்பட்ட நிலையில், அசானி புயலின் தாக்கத்தால் கர்நாடகத்தில் இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.