இப்படியும் சாதனை.. ஃபைன் போட்டு தள்ளிய டிராபிக் போலீஸ்.. அடேயப்பா.. ஆறு மணி நேரத்தில் இவ்வளவா?
பெங்களூர் : கர்நாடக மாநிலம் பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார் போக்குவரத்து காவலர் ஒருவர்.
போக்குவரத்து காவல் அதிகாரியின் இந்த அரிய சாதனை குறித்து பெங்களூரின் காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் அவரது படத்துடன் ட்வீட் செய்துள்ளனர்.
தனது இத்தனை ஆண்டு கால பணி அனுபவத்தில் 6 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை அபராதமாக வசூலிக்கப்படுவது இதுவே முதல்முறை என சிவண்ணா தெரிவித்துள்ளார்.

6 மணி நேரத்தில்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் எம்.சிவண்ணா. இவர் ஜூன் 21-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி ஜங்ஷனில் பணியில் ஈடுபட்டார்.
இந்த 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார்.

ஒரே நபரிடம்
249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார் சிவண்ணா. இதில் அதிகபட்சமாக எஸ்யூவி கார் உரிமையாளர் ஒருவரிடம் கடந்த 6 மாதங்களில் நகரின் 36 இடங்களில் 'நோ பார்க்கிங்' விதிமுறைகளை மீறியதற்காக ரூ.36 ஆயிரத்தை அபராதமாக வசூலித்துள்ளார்.

சிவண்ணா
அந்த ஆறு மணி நேரத்தில், அந்த எஸ்யூவி தவிர, சில இரு சக்கர வாகனங்கள் மீது கிட்டத்தட்ட 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விதிமீறல்கள் தவறான பார்க்கிங் மற்றும் சிக்னல் ஜம்பிங் மற்றும் ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்ததற்காக விதிக்கப்பட்டதாக போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவண்ணா கூறியுள்ளார்.

அனுபவத்தில் முதல் முறை
போக்குவரத்து காவல் அதிகாரியின் இந்த அரிய சாதனை குறித்து காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் அவரது படத்துடன் ட்வீட் செய்துள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் சிவண்ணா கூறுகையில், "எனது வாழ்க்கையில் 12 வருட போக்குவரத்து காவல்துறை அனுபவத்தில் 6 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வசூலிப்பது இதுவே முதல்முறை" எனத் தெரிவித்துள்ளார்.