குடும்ப கட்சிகளால் தான் பாஜகவே வளர்ந்தது! பிரதமர் மோடிக்கு ‛பிளாஷ்பேக்’ கூறிய எச்டி குமாரசாமி
பெங்களூர்: ‛‛குடும்ப கட்சிகளால் தான் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி குடும்ப கட்சிகளை விமர்சனம் செய்வதற்கு முன்பு பாஜகவின் முந்தைய வளர்ச்சியை படிக்க வேண்டும்'' என கர்நாடக முன்னாள் முதல்வரான எச்டி குமாரசாமி காட்டமாக ‛பிளாஷ்பேக்' கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீப காலமாக குடும்ப கட்சிகளையும், வாரிசு அரசியலையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கூட ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேசினார்.
சென்னை பல்லாவரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்று ஐடி ஊழியர் தற்கொலை
அப்போது, ‛‛குடும்ப அரசியல் கட்சிகள் ஊழல் செய்கின்றன. இந்த கட்சிகள் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே செயல்படுகின்றன. இதனை நாடு பார்த்து வருகிறது. குடும்ப அரசியல் என்பது அரசியல் சார்ந்த பிரச்சனையாக உள்ளதோடு, ஜனநாயகம் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிராக உள்ளது. குடும்ப கட்சி, வாரிசு அரசியலால் தான் இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைப்பது இல்லை'' என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

குமாரசாமி விமர்சனம்
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்டி குமாரசாமி (மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவின் பிளாக்பேக்கை கூறியுள்ளதோடு, பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

முந்தைய காலத்தை பாருங்க
குடும்பங்கள் நடத்தும் கட்சி தான் நாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அரசியலில் பெரும் பிரச்சனையாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். பிரதமர் மோடி இப்படி பேசுவதற்கு முன்பு பாஜக எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதன் முந்தைய காலக்கட்டத்தை பார்க்க வேண்டும். பிரதமர் மோடி தேர்தல் அரசியலுக்காக குடும்ப அரசியலை விமர்சிப்பதோடு, மாநில கட்சிகளை வேரறுக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறார். இதற்கு பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில் மாநில கட்சிகள் மட்டுமே பாஜகவுக்கு எதிரியாக இருப்பது தான் காரணம்.

ஜனதாபரிவார்
இந்தியாவின் அவசர நிலையின்போது லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நரேன் தனது உடல்நலனை கருத்தில் கொள்ளாமல் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதாபரிவார் அமைப்பை உருவாக்கினார். இந்த ஜனதாபரிவார் கட்சி தற்போது ஆழமாக வேர் ஊன்றி கிளைகளை பரப்பி உள்ளது. பாஜகவும் ஜனதாபரிவாரின் அங்கமாக தான் இருந்தது. மதசார்பற்ற ஜனததாளம், ஐக்கிய ஜனதாதளம், பிஜேடி, சமாஜ்வாதி ஆகியவை ஜனதாபரிவார் அமைப்புகளின் கிளைகளாக உள்ளன. இந்த கட்சிகளின் வேர்களை அறுப்பது எளிதானது அல்ல. இது பிரதமர் மோடிக்கும் தெரியும்.

பாஜக வளர்ச்சி எப்படி?
ஜனசங்கம் என்பது பாஜக எனும் கட்சியாக உருமாறி மத்தியில் சொந்தமாக ஆட்சிக்கு வரவில்லை. குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் உதவியுடன் தான் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி உருவானது?. அதில் எத்தனை கட்சிகள் இருந்தன?. எந்தெந்த கட்சிகள் இருந்தன? என்பதை நினைவு கூற வேண்டும். தற்போது பாஜகவுக்கு 303 எம்பிக்கள் லோக்சபாவில் உள்ளனர். தொடக்க காலத்தில் அவர்களுக்கு எத்தனை எம்பிக்கள் இருந்தனர். பாஜகவின் பயணம் எப்படியாக இருந்தது என்பதை பிரதமர் மோடி படிக்க வேண்டும்.

பாஜகவில் வாரிசு அரசியல்
வாரிசு அரசியல், ஊழல் பற்றி பேசும் பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சியில் உள்ள குறைபாடுகளை ஏன் பார்க்கவில்லை?. பிரதமர் மோடி ஏன் தனது கட்சியில் உள்ள வாரிசு அரசியல், ஊழல் பற்றி கண்டுக்கொள்வது இல்லை?. இந்தியாவுக்கும், அரசியலுக்கும் குடும்ப கட்சிகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. உணர்ச்சிகரமாக மக்கள் மத்தியில் பேசி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமின்றி அரசியலமைப்புக்கும் கேடுவிளைவிக்கும்.

குதிரை பேரத்தில் பாஜக
பாஜக கட்சி குதிரை பேரத்தில் எம்லஎல்ஏக்களை வாங்கி ஆட்சியை பிடிக்கிறது. ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து பிற கட்சி எம்எல்ஏக்களுக்கு வழங்கி ஆட்சியை பிடிப்பது நாட்டுக்கு நல்லதா?. இதுதான் நாட்டு இளைஞர்களுக்கான முன்னுதாரணமா?. இந்த வகையில் மத்திய பிரதேசம், கர்நாடகத்தில் ஆட்சியை பாஜக கவிழ்த்தது. கர்நாடக முதல்வர் பதவிக்கு 2,500 கோடி கேட்பதாக பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார். இதுபற்றி எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பிரதமர் மோடியின் மவுனம் அதனை உண்மையாக்குவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யார் இந்த எச்டி குமாரசாமி?
கர்நாடகத்தில் உள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவராக எச்டி குமாரசாமி இருந்தார். தற்போது ராம்நகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவான இவர் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு சென்ற நிலையில் குமாரசாமி ஆட்சியை இழந்தார். குமாரசாமியின் தந்தை முன்னாள் பிரதமர் எச்டி தேவேகவுடா ஆவார். குமாரசாமியின் சகோதரர் எச்டி ரேவண்ணா எம்எல்ஏவாக உள்ள நிலையில் 2019 மக்களவை தேர்தலில் எச்டி தேவேகவுடா, குமாரசாமியின் மகன் நிகில் ஆகியோர் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். இந்நிலையில் தான் குடும்ப அரசியலை விமர்சித்த பிரதமர் மோடியை அவர் தாக்கி பேசியுள்ளார்.