36 ஆயிரம் கோயில்களை முகலாயர்கள் அழித்தனர்.. அனைத்தையும் மீட்போம்.. சூளுரைக்கும் பாஜக ஈஸ்வரப்பா
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா, 36 ஆயிரம் கோயில்களை முகலாயர்கள் அழித்தார்கள் என கூறி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா. இவர் அண்மையில் ஒரு நாள் காவிக் கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக மாறும். செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் என கூறியிருந்தார்.
இவர் ஒரு கட்டத்தில் எங்களை பார்த்து அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியுமா என பலர் சிரித்தனர். ஆனால் இன்று என்ன நடந்தது.

அயோத்தி கோயில்
கோயில் கட்டப்படுகிறதா இல்லையா. அது போல்தான் 500 ஆண்டுகளிலாவது தேசியக் கொடியாக காவிக் கொடி மாறும் என பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை அடுத்து ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மாண்டியா
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஈஸ்வரப்பா பேசுகையில் ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு கோயில் இடமாற்றப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டது ஏன்? மொத்தம் 36 ஆயிரம் கோயில்கள் முகலாயர்களால் அழிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் மீட்டெடுப்போம். எந்த சண்டை சச்சரவுகளும் இன்றி நீதிமன்ற தீர்ப்பின்படி மீட்போம்.

அனுமன் கோயில்
இன்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள அனுமன் கோயிலை முஸ்லீம்களும் ஏற்கிறார்கள். அந்த காலத்தில் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றி அனுமன் கோயிலை காத்தனர். ஆனால் எதற்காக கோயில் இடமாற்றப்பட்டது? அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது ஏன்? இதற்கு காங்கிரஸ் என்ன சொல்ல போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீரங்கபட்டினம் விவகாரம்
ஸ்ரீரங்கப்பட்டினம் விவகாரம் ஜாமியா மசூதியை சுற்றி எழுந்ததாகும். மாண்டி துணை ஆணையரிடம் வலது சாரி அமைப்புகள் ஒரு புகாரை கொடுத்துள்ளனர். அதில் மசூதியில் இந்து கடவுளின் சிலைகள் இருப்பதால் மசூதியில் பூஜை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.