சூப்பர்ல.. மைக் ஆன்-ல் இருப்பது தெரியாமல் மொத்த "மேட்டரை" உளறி கொட்டிய பாஜக எம்பி.. பரபர வீடியோ
பெங்களூரு: மைக் ஆன் செய்யப்பட்டிருப்பது தெரியாமல், அமைச்சரை பற்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் கர்நாடக எம்பி ஒருவர்.. இதுதான் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி திட்ட பணியின் துவக்க விழா, துமகூரு மாவட்டத்தில் நடந்தது.. இதில் அம்மாவட்டத்தை சேர்ந்த எம்பி ஜிஎஸ் பசவராஜூ, சட்டத்துறை அமைச்சர் ஜேசி மதுசுவாமி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பைரதி பசவராஜ் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்து முடிந்தது.. தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடக்க இருந்தது.. ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு, சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி அங்கிருந்து உடனே கிளம்பி விட்டார்..
மதமாற்றத் தடை மசோதா: கிழித்து எறிந்த காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார்.. கர்நாடக சட்டசபையில் அமளி

ரகசிய பேச்சு
பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது.. இதில், எம்பி ஜிஎஸ் பசவராஜூ, அமைச்சர் பைரதி பசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.. இருவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.. செய்தியாளர் சந்திப்புக்கு ஆரம்பிப்பதற்கு முன்னதாக, இருவரும் தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.. அப்போது, பசவராஜ் மெல்லிய குரலில் ரகசியமாக பைரதியிடம் மதுசுவாமியை பற்றி புகார் சொல்ல ஆரம்பித்தார்..

அரசு அதிகாரி
"இதோ இப்போ கிளம்பி போகிறாரே, இந்த அமைச்சரை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?.. இவர் அப்படியே அந்த வடகொரியா சர்வாதிகாரி கிம் ஜாங் போலவேதான்.. நம்ம மாவட்டத்தையே பாழாக்கிட்டார்.. இந்த மாதிரி ஆட்கள் இருந்தால், இந்த மாவட்டத்தில் ஒரு சீட் கூட நம்ம கட்சிக்கு கிடைக்காது... இப்படித்தான், கடந்த வருடம் ஒரு ஆய்வு கூட்டம் நடந்தது.. அங்கிருந்து ஒரு அரசு அதிகாரியை பார்த்து, "நீ உன் பொண்டாட்டி துணியை துவைக்கதான் லாயக்கு.. முதல்ல இந்த கூட்டத்தில் இருந்து வெளியே போ"ன்னு சத்தம் போட்டிருக்கிறார்.. அந்த அதிகாரி என்ன இவர் வீட்டு வேலையாளா?" என்று பசராஜ் பேசி கொண்டே போனார்..

சமாதானம்
அவரை ஒருகட்டத்தில் பைரதி சமாதானப்படுத்த போனார்.. ஆனாலும் பசவராஜ் ஆவேசம் தாங்காமல் பேசி கொண்டே புகாரை தொடர்ந்தார்.. இவ்வளவும் பேசும்போதும், அங்கிருந்த மைக் ஆன் செய்யப்பட்டு இருந்தது.. செய்தியாளர் சந்திப்பு ஆரம்பமாகவில்லை என்று நினைத்து, மைக் ஆனில் இருப்பது தெரியாமலேயே லிஸ்ட் வாசித்து விட்டார் பசவராஜ்.. பிறகு வழக்கம்போல் செய்தியாளர் சந்திப்பும் நடந்து முடிந்தது..

வீடியோ
ஆனால், இந்த சந்திப்பை விட, பசவராஜ் சொன்ன ரகசிய குற்றச்சாட்டுகள்தான் இணையத்தில் வீடியோவாக வைரலாகியது.. பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ சம்பந்தப்பட்ட, அமைச்சர் மதுசுவாமி கண்ணிலும் பட்டுவிட்டது.. இதை பற்றி அவர் சொல்லும்போது, "எம்பி ஜிஎஸ் பசவராஜூ மனசில் எதுவுமே வைத்து கொள்ளாமல், நினைத்ததை பேசிட்டார்.. எனக்கு வட கொரிய அதிபரை பற்றி ஒன்னும் தெரியாது... அவங்களுக்கு ஒருவேளை இதுதான் ஆசையென்றால், என்னை கட்சியிலிருந்து நீக்கட்டும்" என்றார்.