டெல்லி விவசாயிகள் போராட்ட ஹீரோ ராகேஷ் திகாயத் மீது பெங்களூரில் கறுப்பு மை வீச்சு- 3 பேர் கைது
பெங்களூர்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டாக முற்றுகையிட்டு வெற்றிகரமாக போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது பெங்களூரில் கறுப்பு மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுளனர். மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Recommended Video - Watch Now
டெல்லி ஸ்டேடியத்தை நாய் வாக்கிங்க்கு பயன்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி, மனைவிக்கு கிடைத்த செம்ம டிரான்ஸ்பர்

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் கடும் குளிர், வெயிலை பொருட்படுத்தாமல் ஓராண்டாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களின் போது 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தியாவில் மிக நீண்டகாலமாக நடைபெற்ற போராட்டமாக இது வரலாற்றில் பதிவானது.டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசும் பணிந்தது. பிரதமர் மோடி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டதுடன் சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களையும் ரத்து செய்தார். இத்தகைய தீரமிக்க விவசாயிகள் போராட்டத்துக்கு தலைமை வகித்தவர் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத். பஞ்சாப் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் விவசாய சங்கப் போராட்டங்கள் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தன.

உ.பி.யில் எச்சரிக்கை
ராகேஷ் திகாயத், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில், கிராமப்புறங்களுக்கு உரிய மின்சாரம் விநியோகிக்கப்படுவதில்லை. கிராமப்புற விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்காவிட்டால் நகர்ப்புறங்களுக்கு மின்சாரம் கிடைப்பதை தடுத்து நிறுத்துவோம் என எச்சரித்திருந்தார்.

பெங்களூரில் கறுப்பு மை வீச்சு
இதனைத் தொடர்ந்து இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ராகேஷ் திகாயத். அப்போது திடீரென சிலர் ராகேஷ் திகாயத் மீது கறுப்பு மை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்ற அரங்கத்தில் பதற்றம் ஏற்பட்டது. அந்த அரங்கில் இருந்த நாற்காலிகள் சரமாரியாக தூக்கி வீசப்பட்டன. ஒரு சிலர் மற்றவர்களை தாக்கினர்.

பெங்களூர் போலீஸ் மீது குற்றச்சாட்டு
இச்சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை தடுத்து வைத்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், பெங்களூரு போலீசார் தமக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அதேபோல், டெல்லி விவசாயிகள் போராட்ட வெற்றியை சகிக்க முடியாத சக்திகளே இத்தாக்குதலுக்கு காரணம் எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.