மதக்கலவர முயற்சியா? காவி உடையுடன் கர்நாடக பள்ளியில் ஆயுத பயிற்சி - பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு
பெங்களூரு: பள்ளியில் காவி உடையணிந்து பஜ்ரங்தளம் அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏக்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள பொன்னாம்பேட்டையில் அமைந்திருக்கும் சாய் சங்கர் கல்வி நிலையத்தில் பஜ்ரங்தளம் அமைப்பின் சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ரகசியமாக ஆயுதப் பயிற்சி நடத்தப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காவி உடை அணிந்து கையில் துப்பாக்கி, வாய், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்தனர்.

பஜ்ரங்தளம்
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்பை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து ஹிஜாப், ஹலால் விவகாரங்களில் மோதல்களில் ஈடுபட்டு கைதாகியும், வழக்குகளை எதிர்கொண்டும் வரும் சூழலில் அவர்கள் இவ்வாறு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது சர்ச்சைக்குள்ளானது.

போலீசில் புகார்
ஆளும் பாஜக அரசின் ஆதரவோடு பள்ளியில் ரகசியமாக இந்த ஆயுதப் பயிற்சி நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட பஜ்ரங்தளம் அமைப்பின் மீது மடிகேரி காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதில், "குடகு மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கே.ஜி.போப்பையா, அப்பா சுரஞ்சன் உள்ளிட்டோர் இந்த ஆயுத பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆயுத பயிற்சி
பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வாள் வீச்சு, துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும், இதனால் சமூக அமைதி சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதனை ஒருங்கிணைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மதக்கலவர முயற்சியா?
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, "இப்படி ஆயுத பயிற்சி நடத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது? மதக் கலவரத்தை தூண்டுவதற்காக இவ்வாறு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டதா? உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தினார்.

பாஜக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு
இந்த நிலையில், மடிகேரி போலீசார் பாஜகவை சேர்ந்த வீராஜ்பேட்டை எம்.எல்.ஏ. கே.ஜி.போப்பையா, மடிகேரி எம்.எல்.ஏ. அப்பா சுரஞ்சன், சட்ட மேலவை உறுப்பினர் சுஜா குஷாலப்பா, பஜ்ரங்தளம் அமைப்பின் மாவட்டத் தலைவர் ரகு சக்லேஷ்பூர், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.