கொரோனா அதிகரிப்பு: கர்நாடகாவில் அனைத்து பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அதிரடி தடை
பெங்களூரு: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்நாடகா மாநிலத்தில் அனைத்து பொதுக்கூட்டங்கள், போராட்டங்களுக்கு அம்மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 15,000-த்தை தாண்டியதாக பதிவாகி உள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் அதிகரிப்பு
கர்நாடகாவில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 14,473 ஆக பதிவாகி இருந்தது. பெங்களூரு நகரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,800. பெங்களூரு நகரில் மட்டும் மொத்தம் 59,000 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் மொத்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 73,260.

முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பாதிப்பு
கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவக்குமார் நடத்தி வரும் பாதயாத்திரை பெரும் சர்ச்சையானது. சிவக்குமாரின் பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி சிவக்குமார் பேரணி நடத்தியது கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாநிலத்தில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தற்போது அமலில் இருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் இரவு நேர ஊரடங்கும் ஜனவரி 19 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

பேரணிகள், பொதுக்கூட்டங்களுக்கு தடை
மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள், தர்ணாக்கள் நடத்துவதற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவக்குமார் நடத்தி வரும் மேகதாது அணைக்கான பாதயாத்திரையும் நிறுத்தப்படும் என தெரிகிறது.