"கடத்தல்காரர்கள் போல.." ராஜேந்திர பாலாஜி கைதானபோது சூழ்ந்து கொண்ட கர்நாடக மக்கள்.. பரபர நிமிடங்கள்
பெங்களூர்: ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் வைத்து கைது செய்த போது வெளியான வீடியோவில் அங்கு கூடிய மக்களில் சிலர் அவரை கடத்தல்காரராக இருக்கலாம் என பேசிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவின் வழக்கில் ரூ 3 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸார் தேடி வந்தனர்.
20 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் அவர் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் அருகே உள்ள ஹாசன் மாவட்டத்தில் காரில் தப்பும் போது கைது செய்யப்பட்டார்.
காவி வேட்டி- கலர் டீ சட்டை அணிந்து ஆளே மாறிப்போன ராஜேந்திர பாலாஜி.. 20 நாட்கள் சிக்காதது எப்படி?

உச்சநீதிமன்றம்
அவரது முன்ஜாமீன் மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் ராஜேந்திர பாலாஜி எங்கிருக்கிறார் என சல்லடை போட்டு தேடப்பட்டது.

சைபர் கிரைம்
அவரது ஒவ்வொரு மூவையும் சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், உறவினர் வீடுகளில் தங்கினால் கண்டுபிடித்துவிடுவார்கள் என நினைத்த ராஜேந்திர பாலாஜி காரிலேயே மாறி மாறி பயணம் செய்துள்ளார். அவரது செல்போன் எண்ணை மாற்றியுள்ளார்.

ஹாசன் மாவட்டம்
இருந்தாலும் அவர் நெருக்கமானவர்களுக்கு நிச்சயம் போன் செய்வார் என்ற அடிப்படையில் அவர்களுடைய எண்கள் எல்லாம் கண்காணிக்கப்பட்டன. இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்திலிருந்து அவர் யாருடனோ பேசுவது தெரிந்த நிலையில் போலீஸார் அங்கு சுற்றி வளைத்தனர்.

ராஜேந்திர பாலாஜி கடத்தல்காரரா?
அவர் பி.எம். சாலையில் நடுரோட்டில் கைது செய்த போது அங்கு கர்நாடக மக்கள் கூடினர். அப்போது அங்கிருந்த ஒருவர் யாரோ கடத்தல்காரராக இருக்கலாம் என கன்னடத்தில் கூறுகிறார். அதாவது தமிழக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜியை அவருக்கு யார் என தெரியாததால் அவரை கடத்தல்காரர் என்றும் அவரை போலீஸார் சுற்றி வளைத்ததாகவும் பேசிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.