ஆணவக்கொலை.. மதம்விட்டு மதம் காதல் செய்த தலித் வாலிபர் படுகொலை.. காதலியின் தம்பி வெறிச்செயல்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் வாடி டவுன் அருகே மதம்விட்டு மதம் காதல் செய்த தலித் வாலிபரை அவரது காதலியின் தம்பி உள்பட 2 பேர் ஆயுதங்களால் தாக்கி கத்தியால் குத்திக்கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் வாடி டவுனில் உள்ள பீமா நகர் லே-அவுட்டில் வசித்து வந்தவர் விஜய் கம்பாளே(வயது 25). தலித் வகுப்பை சேர்ந்த இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
விஜய் கம்பாளே இந்துவாக உள்ள நிலையில் அந்த பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் ஆவார். இதற்கிடையே இவர்கள் 2 பேரும் காதலித்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்

குடும்பத்தினர் எதிர்ப்பு
இதனை அந்த பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்தனர். இருவரும் வெவ்வேறு மதம். இது குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. இதனால் விஜய் கம்பாளேவுடன் பழகுவதை நிறுத்த வேண்டும் என இளம்பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் அட்வைஸ் செய்தனர். அதேநேரத்தில் இளம்பெண்ணின் சகோதரர் உள்பட சிலர் விஜய் கம்பாளேவின் வீட்டுக்கு சென்று, ‛‛காதல் என சுற்றக்கூடாது. மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக்கூறி கழுத்தை வெட்டி கொலை செய்துவிடுவோம்'' என மிரட்டியுள்ளனர்.

குத்திக்கொலை
இருப்பினும் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது இளம்பெண்ணின் சகோதரருக்கு தெரியவந்தது. இதனால் அவர் விஜய் கம்பாளே மீது கடும் கோபமடைந்தார். இந்நிலையில் வாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற விஜய் கம்பாளேவை மர்மநபர்கள் ஆயுதம், கல், கட்டையால் சரமாரியாக தாக்கினர். மேலும், கத்தியால் குத்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் விஜய் கம்பாளே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜய் கம்பாளேவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விஜய் கம்பாளேவின் தாய் போலீசில் புகார் செய்தார். மேலும் இளம்பெண்ணின் சகோதரர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

2 பேர் கைது
இந்நிலையில் தான் கொலை வழக்கு தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி எஸ்பி இஷா பண்ட் கூறுகையில், ‛‛விஜய் கம்பாளேவை கொலை செய்ததாக சகாபுதீன் (19), நவாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் சகாபுதீன் என்பவர் விஜய் கம்பாளே காதல் செய் இளம்பெண்ணின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.