ஈத்கா மைதானத்தில் இந்து பண்டிகை! பெங்களூரில் அனுமதிகோரிய அமைப்பு! உயர்நீதிமன்றத்தை நாட முடிவு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினம், இந்து பண்டிகைகளை கொண்டாட அனுமதி கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாக விஷ்வ சனாதன் பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு துவக்கம் முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மதம்சார்ந்து சில பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.
முதன் முதலாக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கோவில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க அனுமதி மறுப்பு, மார்க்கெட்டுகளில் முஸ்லிம் வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்துத்துவா அமைப்பினர் கூறினர்.
29 விவசாயிகளிடம் நிலம் கேட்டு மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ - விஷம் குடித்த 4 பேர்

தொடர் பதற்றம்
மேலும் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு போட்டியாக கோவில்களில் அனுமன் பாடல்கள் இசைக்கப்படும் என இந்துத்துவ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்ததால் கர்நாடகத்தில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவியது. தற்போது பிரச்சனைகள் குறைந்துள்ளன.

ஈத்கா மைதானத்தில் இந்து பண்டிகை
இந்நிலையில் தான் பெங்களூர் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சுதந்திர தினம், குடியரசுத் தினம், மற்றும் பல்வேறு இந்து பண்டிகைககளை கொண்டாட இந்துத்துவா அமைப்புகள் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஈத்கா மைதானத்தில் யோகா தினம் மற்றும் சுதந்திர தினம் கொண்டா சில அமைப்புகள் அனுமதி கோரியுள்ளன. இதற்கு பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கப்படாததால் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாட விஷ்வ சனாதன் பரிஷத் அமைப்பு முடிவு செய்துள்ளது.

உயர்நீதிமன்றத்தை நாடுவோம்
இதுகுறித்து விஷ்வ சனாதன் பரிஷத் அமைப்பின் தலைவர் பாஸ்கரன் கூறுகையில், "பெங்களூர் ஈத்கா மைதானத்தை பயன்படுத்துவது குறித்து பெங்களூர் மாநகராட்சி இணை கமிஷனரை அணுகினோம். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த மைதானம் பெங்களூர் மாநகராட்சிக்கு சொந்தமானது. இதனால் அதில் அறிவிப்பு பலகையை வைத்து மின்பாரை இடிக்க வேண்டும். ஈத்கா மைதானத்தில் சுதந்திரம் தினம் மற்றும் இந்து பண்டிகை கொண்டாட அனுமதிகோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளோம். மேலும், முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேச உள்ளோம்'' என்றார்.

பிளவை உருவாக்க முயற்சி
இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஈத்கா மசூதி மற்றும் அஞ்சுமன்-இ-இஸ்லாமியாவின் பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் கூறுகையில், ‛‛ஈத்கா மைதானத்தை பொறுத்தமட்டில் தற்போதைய கோரிக்கையை வைப்பவர்கள் மூன்றாம் தரப்பு நபர்கள். இவர்கள் பிளவை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஈத்கா மைதானம் கர்நாடக வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது. இது அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கட்டும். சிஎம்ஏ என்பது சொத்தின் பாதுகாவலர். இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பண்டிகைகளை கொண்டாட விரும்புகிறார்கள்.இந்த விஷயத்தி்ல தவறான நோக்கத்துடன் வரும்போது நாங்கள் நிச்சயம் எதிர்ப்போம்'' என்றார்.