• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அதிர வைத்த திருமணம்.. சின்ன எம்ஜிஆர் பட்டம்.. ஜெயலலிதாவே "நொந்து" போனார்.. "சர்ச்சை நாயகன்" சுதாகரன்

Google Oneindia Tamil News

பெங்களூர்: நான் செய்த மிகப்பெரிய தவறு என ஜெயலலிதாவே பேட்டியொன்றில் ஒப்புக் கொண்ட சம்பவத்திற்கு காரணம், தன்னைத்தானே சின்ன எம்ஜிஆர் என பட்டம் கொடுத்துக் கொண்டவர்.. என 1990களில் பல சர்ச்சைகளின் நாயகனாக வலம் வந்த சுதாகரன் இன்னும் சில நாட்களில் பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசியுடன் சேர்ந்து, சுதாகரனும் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுக்கான அதே தண்டனைதான். 4 வருடம் சிறை.. 10 கோடி அபராதம்.

இந்த வழக்கில் விசாரணை கைதியாக 92 நாட்கள் சிறையில் இருந்ததை காரணம் காட்டி, வெளியேறப்போகிறார் சுதாகரன். இன்று அல்லது, திங்கள்கிழமை ரூ.10 கோடி அபராதத்தை செலுத்த உள்ளது அவர் தரப்பு.

சுதாகரன் பின்னணி

சுதாகரன் பின்னணி

யார் இந்த சுதாகரன்? ஏன் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இவரும் சேர்க்கப்பட்டார்? விசாரணைக்கு பெங்களூர் நீதிமன்றம் வந்தபோது ஒன்றாகவே வருவாரே தவிர, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரிடம் மறந்தும் பேச மாட்டாரே ஏன்? அவர்களும் இவரை ஒரு பொருட்டாகவே கருதாமல் தனி வழியில் செல்வார்களே ஏன்?

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்

90ஸ் கிட்ஸ் அல்லது அதற்கு முந்தைய கிட்ஸ்களுக்கு சுதாகரன் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சி காலம் 96ல் முடிந்த பிறகு இவர் பெயர் அதிகம் அடிபட்டது இல்லை. ஆனால் உலகமே வியந்து பார்த்த பல சம்பவங்களை அதற்கு முன்பே செய்துவிட்டார் சுதாகரன்.
அதில் ஒன்றுதான், சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்ததும், பிறகு இவருக்கு நடைபெற்ற விமரிசையான திருமணமும்.

சசிகலா அக்கா மகன்

சசிகலா அக்கா மகன்

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உடன் பிறந்த அக்கா வனிதாமணியின் கடைசி மகன்தான் சுதாகரன். தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்ததாகப் பிறந்தவர் இவர். அப்போதே இவ்வளவு பெரிய ஆணை தத்தெடுப்பதா என தமிழகமே மூக்கு மீது விரலை வைத்தது. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே நடிகர் சிவாஜி கணேசன் பேத்தியோடு சுதாகரனுக்கு திருணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு திருமணம்

இப்படி ஒரு திருமணம்

திருமணம் என்றால் திருமணம்.. அதுவரை தமிழகம் கண்டிராத கோலாகல திருமணம் அது. மிகவும் பிரபலமான சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணி இந்த திருமணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பில் பந்தல் அமைத்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள். 25 ஆயிரம் பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அவர் கை வண்ணத்தில் அமைக்கப்பட்டது. இசைக் கச்சேரி யார் தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மான். கனவு திருமணம் என்பார்களே அப்படி.. யாருக்குமே கிடைக்காத வாழ்வு இது. சுதாகரனுக்கு கிடைத்தது.

நடமாடும் நகைக் கடையாக மாறிய ஜெ., சசிகலா

நடமாடும் நகைக் கடையாக மாறிய ஜெ., சசிகலா

இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அந்த படங்கள்தான் இதுவரை அவ்விருவரை நினைத்தாலும் மக்கள் மனதில் தோன்றி, ஷாக் அலைகளை ஏற்படுத்தி வருகிறது. மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்குவதாக அறிவித்த ஜெயலலிதாவும், அவருக்கு உதவியாளராக வந்த சசிகலாவும் நடமாடும் நகைக்கடையாக மாறிப்போனதை பார்த்து கைகளை கிள்ளிப் பார்த்து நிஜம்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டவர்கள் பலர்.

மக்கள் கடும் கோபம்

மக்கள் கடும் கோபம்

இந்த திருமணம்தான், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உண்மை இருக்கலாம் என்று பலரையும் ஆணித்தரமாக நம்ப வைத்தது. 1996 சட்டசபை தேர்தலில் அதிமுக வரலாறு காணாத அடி வாங்கியது. பர்கூரில் சாட்சாத் ஜெயலலிதாவே தோற்றுப்போனார். சொத்துக்குவிப்பு வழக்கு கடைசி காலம் வரை அவர் காலை சுற்றிய பாம்பாக மாறியது. மக்களின் மனநிலையை உணர்ந்துதான், நான் செய்த மிகப்பெரிய தவறு வளர்ப்பு மகன் திருமணம் என்று ஜெயலலிதா ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

கோடிக் கணக்கில் செலவு

கோடிக் கணக்கில் செலவு

சுதாகரன் திருமணத்துக்கு அப்போதே மொத்தம் ரூ.6 கோடியே 49 லட்சம் செலவு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. ஆனால், 1.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிலும், 27 லட்ச ரூபாயைத்தான் ஜெயலலிதா செலவழித்தார் என்றும், மற்ற செலவுகளை அதிமுக தொண்டர்கள் செய்ததாகவும் ஜெயலலிதா வக்கீல் வாதாடினார். திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருளே 100 கோடி ரூபாயைத் தாண்டும் என்று அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

சுதாகரன் ரிலீஸ்

சுதாகரன் ரிலீஸ்

இதன்பிறகு தனக்குத் தானே சின்ன எம்.ஜி.ஆர் என்கிற அடைமொழியோடு, நற்பணி மன்றங்களைத் திறந்து மாஸ் காட்ட நினைத்தார் சுதாகரன். ஏற்கனவே பெயரை கெடுத்தாச்சு, இப்போ இதுவேறா என கார்டன் கடுப்பானது. 2001ல் மீண்டும் மக்கள் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்டு முதல்வராக்க, வந்ததும் வராததுமாக, ஹெராயின் வழக்கு, கைத் துப்பாக்கி வழக்குகள் சுதாகரன் மீது பாய்ந்தது தனிக் கதை.

English summary
Jayalalithaa's adopted son Sudhakaran, who emerged as the hero of many controversies in the 1990s, will be released from Bangalore jail in a few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X