டிகே சிவகுமார் கைது.. கர்நாடகா பந்த்துக்கு காங்கிரஸ் அழைப்பு .. பெங்களூர்-மைசூர் ரோடு ஸ்தம்பிப்பு
பெங்களூர்: டி.கே.சிவகுமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர், இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
போராட்டத்தின் காரணமாக பெங்களூரு-மைசூரு நடுவேயான சாலைபோக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
பணமோசடி வழக்கு தொடர்பாக, ஐந்து நாட்கள் விசாரணை நடத்திய பிறகு, அமலாக்கத் துறையினர் திடீர் என கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டிகே சிவகுமாரை நேற்று இரவு கைது செய்தனர்.

டயர்கள் எரிப்பு
இதை கண்டித்து, புதன்கிழமையான இன்று கர்நாடகம் தழுவிய அளவில் பந்த் நடத்த, காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதையடுத்து, மாநிலம் முழுக்க காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் டயர்களை போட்டு எரித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

பெங்களூர் நிலவரம்
தலைநகர் பெங்களூரை பொருத்த அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பள்ளிகள், கடைகள், அலுவலகங்கள் திறந்திருந்தன. அதேநேரம், பெங்களூர் முதல் மைசூர் வரையிலான ராம்நகரம், மண்டியா மற்றும் மைசூர் ஆகிய மாவட்டங்களில், போராட்டத்தின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது.

காவிரி பெல்ட்
ஏனெனில் டி.கே.சிவகுமார், ராமநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது ஒரு காரணம் என்றால், சிவகுமார் சார்ந்துள்ள ஒக்கலிகர் ஜாதியினர் பெருமளவில் இருப்பது பெங்களூர் முதல் மைசூர் வரையிலான இந்த பிராந்தியத்தில்தான். எனவே, அங்கு போராட்டங்களில் மிகத்தீவிரமாக நடைபெறுகின்றன.

சாலை போக்குவரத்து
பெங்களூர் அடுத்த பிடதி, அதை அடுத்து ராமநகரம், சென்னபட்டணா, மண்டியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூரு மற்றும் மைசூர் நடுவே சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. எனவே இந்த சாலையை தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!