பெங்களூர் மேம்பாட்டு ஆணைய தோட்டக்காரருக்கு சொந்தமாக 4 வீடு, குவியலாக நகைகள்! வாயை பிளந்த அதிகாரிகள்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் அரசுத் துறையில் பணிபுரியும் தோட்டக்காரர் ஒருவருக்கு இருக்கும் சொத்துகளைக் கேட்டால் நிச்சயம் தலையே சுற்றி விடும்.
இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக லஞ்சமும் ஊழலும் உள்ளது. இதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுக்கும் போதிலும் அது பெரியளவில் பலன் தருவதாக இல்லை.
இருப்பினும், இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. அப்படி கர்நாடகாவில் நடைபெற்ற சோதனையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்த விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
29 விவசாயிகளிடம் நிலம் கேட்டு மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ - விஷம் குடித்த 4 பேர்

தோட்டக்காரர்
பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் (பிடிஏ) தோட்டக்காரராக பணிபுரிந்து வருபவர் சிவலிங்கய்யா. 60 வயதாகும் சிவலிங்கய்யா, இன்னும் 13 நாட்களில் ஓய்வு பெற உள்ளார். இந்தச் சூழலில் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் சிவலிங்கய்யாவுக்கு நான்கு வீடுகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சொத்துகள்
கடந்த வெள்ளிக்கிழமை 21 அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமான 80 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நான்கு வீடுகள் சிவலிங்கய்யாவுக்கு சொந்தமானதாக உள்ளது. ஜேபி நகரில் இரண்டு, குமாரசாமி லேஅவுட் மற்றும் தொட்டகல்லாசந்திராவில் தலா ஒரு வீடு சொந்தமாக உள்ளது. இவை தவிர, தொட்டகல்லாசந்திராவில் திறந்தவெளி நிலம், ராமநகரா சன்னப்பட்டணா தாலுகாவில் 1 ஏக்கர் 9 குண்டாஸ் விவசாய நிலம் வைத்துள்ளார்.

நகைகள்
இது மட்டுமின்றி 510 கிராம் தங்க ஆபரணங்கள், 700 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவையும் அவருக்குச் சொந்தமாக உள்ளது. சிவலிங்கய்யாவிடம் 3 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் உள்ளன. மேலும் 86,000 ரூபாய் ரொக்கம் மற்றும் 80,000 ரூபாய் வைப்புத்தொகை வைத்துள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அரசுத் துறையில் சாதாரண தோட்டக்காரராக பணிபுரிந்த இவருக்கு இவ்வளவு சொத்துகள் உள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

யார் இவர்
சிவலிங்கய்யா பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் உதவி செயற்பொறியாளரின் உதவியாளராகவும் சில காலம் பணியாற்றி உள்ளார். பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த இவருக்கு உயர் அதிகாரிகள் உடன் நல்ல உறவு இருந்துள்ளது. மேலும், பொறியியல் பட்டதாரியான அவரது மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். மேலும், அவரது மகன் பெங்களூரில் முக்கிய பகுதியில் பார் அண்ட் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார்.

எப்படி
சிவலிங்கய்யாவுக்கு பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் என்ன நடக்கிறது எனத் தெளிவாகத் தெரியும். அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட்கள். அங்கீகரிக்கப்படாத லேஅவுட்கள் என அனைத்தும் அவருக்கு அத்துப்படி. இந்த பிரிவில் அவருக்கு இருக்கும் அறிவையும் உயர் அதிகாரிகள் உடன் இருக்கும் தொடர்பையும் பயன்படுத்தி அவர் இவ்வளவு சொத்துகளைச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ரெய்டு
கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகா அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் சுமார் 555 அதிகாரிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டன. முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மட்டுமின்றி, சிவலிங்கய்யா போலச் சந்தேகத்திற்கு இடமான முறையில் சொத்து குவித்த ஊழியர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டன. மேலும், ஓய்வு பெற்ற இருவரின் வீடுகளிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன.