கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா... வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவித்த அரசு
பெங்களூரு: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக கர்நாடகாவில் மாநில அரசு வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவெடுத்துள்ள நிலையில், 10, 11, 12 ஆகிய வகுப்புகளை தவிர மற்ற வகுப்புகளுக்கு நேரடி பாடம் நடத்துவதையும் நிறுத்த முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரொனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை பல்வேறு மாநிலங்களில், ஏராளமானோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. 3 மண்டலங்கள் ஹாட்ஸ்பாட்டாகிறதா?.. டேட்டா சொல்வது என்ன?
அதிகபட்சமாக மகாராஷ்டிரா அதைத் தொடர்ந்து டெல்லி , தெலங்கானா, பேரும், கர்நாடகா, குஜராத், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளாமானோர் கொரோனா மற்றும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமிக்ரான் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன.

கொரோனா பரவல் அதிகரிப்பு
கர்நாடகாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால் அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியது. கொரோனா தொற்று பவரலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தாலாமா? என கர்நாடக அரசு திட்டமிட்டு வந்தது.

வார இறுதியில் ஊரடங்கு
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை இரண்டு வாரங்களுக்கு வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர் அசோகா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஜனவரி 7 ஆம் தேதியுடன் முடிவடையும் தற்போதைய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் எனவும், வார இறுதி நாட்களில் உணவு ,பால், மருந்துகள் ,காய்கறிகள், மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் ஹோட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கட்டுப்பாடுகள் தீவிரம்
தியேட்டர்கள் மால்கள் கார்கள் பஸ்கள் மற்றும் அனைத்து பொது இடங்களும் 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படும் எனவும் பொது இடங்களுக்கு வரும் நபர்கள் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்த அவர்களுக்கு பொது இடங்களில் நுழைய தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வெளிப்புற அரங்கு என்றால் 200 பேரும், உள் அரங்கங்களில் 100 பேருக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும், இங்கும் விருந்தினர்களாக வருபவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் எனக் கூறினார்.

பெங்களூரு கொரோனாவின் மையம்
தொடர்ந்து பேசிய கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகர் , மகாராஷ்டிரா கேரளா மற்றும் கோவாவில் இருந்து மாநிலத்திற்குள் நுழைபவர்கள் கொரோனா இல்லை என்ற ஆர்டிபிசிஆர் சான்றுகளுடன் வரவேண்டும் எனவும், மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டாலும் 50 பேருக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளார். கர்நாடகாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக கூறிய அவர் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது பெங்களூரு கோரோனாவின் மையமாக இருந்ததாகவும், மூன்றாவது அலையிலும் கூட விமான நிலையம் இங்கு இருப்பதால் வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.