• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அறிஞர் அண்ணாவின் ரசிகர்.. அரசியல் தர்மத்தின் காவலன்.. ஹீரோவான கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்

|
  நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹீரோவான கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்

  பெங்களூர்: கர்நாடகாவில், குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து கவிழ்ந்துள்ளது. இதனால் கர்நாடகாவில், ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

  ஆனால், இந்த பரபரப்பான சூழ்நிலைகளை கூலாக கையாண்டவர் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார். இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்படி ஒரு மகேந்திரசிங் தோனியோ, அதுபோல கர்நாடக அரசுக்கு ஒரு ரமேஷ் குமார் என்றால் அது மிகையல்ல.

  கோலார் மாவட்டம், சீனிவாசபுரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ரமேஷ்குமார். அரசியலில் மிக நீண்டகால அனுபவம் கொண்டவர்.

  காமராஜர், அண்ணா

  காமராஜர், அண்ணா

  கர்நாடக சட்டசபையில், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களைப் பற்றி அடிக்கடி தனது உரையின்போது குறிப்பிடுபவர் என்றால் அது ரமேஷ்குமார். கர்நாடக அரசியல் மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசியல் வரலாற்றையும் கரைத்து குடித்த விஷயானுபவம் கொண்டவர்தான் இவர்.

  முதல்வராலே முடியாது

  முதல்வராலே முடியாது

  ரமேஷ்குமார் சபாநாயகர் சீட்டில் உட்கார்ந்து இருக்கும்போது, அவை நடவடிக்கை அத்தனை சுமுகமாக செல்லும். குண்டூசி விழுந்தாலே சத்தம் வரும் அளவுக்கு பிற உறுப்பினர்கள் அமைதி காப்பார்கள். மொத்த அவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல்வரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ, யாராக இருந்தாலும் இவரை கண்டால் ஒரு அச்சம் கலந்த மரியாதையுடன்தான் பேச முடியுமே தவிர, தங்கள் இஷ்டத்திற்கு எதையும் செய்துவிட முடியாது. கடந்த 14 மாத காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சியில், சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக கண்டு உணர்ந்த பத்திரிக்கையாளர்களின் கூற்றும் இதுவே ஆகும்.

  அறிவாளி

  அறிவாளி

  பல நூலகங்களுக்குச் சென்று, பல புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் விவரங்களை விடவும் ரமேஷ்குமார் சட்டசபையை நடத்தும் போது உள்ளே இருந்தாலே போதும், அந்த அறிவு அனைத்தும் அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கவனித்தாலே பெற்று விடலாம், என்கிறார்கள் சட்டசபை நிகழ்ச்சிகளை சேகரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர்கள். அரசியல் அறிவு மட்டுமின்றி, அரசியல் சாசனம் மற்றும் சட்டம் தொடர்பான தெளிவு மிகுந்தவர் தான் ரமேஷ்குமார். இயல்பிலேயே வழக்கறிஞராக இருந்து அதன் பிறகு அரசியலுக்கு வந்தவர். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து விட்டால் கட்சிபேதமின்றி நடக்க வேண்டுமென்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர். காந்தி கற்பித்த நியாய தர்மங்களையும், முன்னாள் முதல்வரான ராமகிருஷ்ண ஹெக்டே, தேவராஜ் அர்ஸ் போன்றோரின் வழிகாட்டுதல்களையும் அவ்வப்போது குறிப்பிட்டு அதன் வழியில் தான், நான் பயணிக்கிறேன் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துகொண்டே இருந்தார் ரமேஷ் குமார்.

  நம்பிக்கை வாக்கெடுப்பு

  நம்பிக்கை வாக்கெடுப்பு

  பொதுவாழ்வில் தூய்மையானவராக, கட்சி பேதமற்றவராக தன்னைக் காட்டிக் கொண்ட ரமேஷ் குமாருக்கு, குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, தாக்கல் செய்த தினம் முதல் அக்னிப்பரிட்ச்சையாக மாறிப் போனது. ஒரு பக்கம் போதிய ஆதரவு எம்எல்ஏக்கள் இல்லாததால், பேசிப் பேசியே அவை நடவடிக்கையை இழுத்தடித்தனர் ஆளும் தரப்பினர். இதற்கு, தான் அனுமதி அளித்தால் தனது பெயர் பொதுவெளியில் கெட்டுப் போய்விடும் என்பதில் மிகவும் அக்கறை காட்டினார் சபாநாயகர். எடியூரப்பாவை விடவும் அதிகமாக, "சீக்கிரமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று அரசை வலியுறுத்தியவர் ரமேஷ்குமார் தான்.

  வரலாறு முக்கியம்

  வரலாறு முக்கியம்

  சபாநாயகர் மட்டும் ஒத்துழைத்தால் எந்த ஒரு ஆட்சியையும், காப்பாற்ற முடியும் என்று அரசியல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அதற்கு நாடு முழுக்க பல உதாரணங்களைச் சொல்லமுடியும். சபாநாயகருக்கு இருக்கக்கூடிய வானளாவிய அதிகாரம் இதற்கு ஒரு காரணம். ஆனால், எடியூரப்பா அரசை அப்போதைய சபாநாயகர் போப்பையா, காப்பாற்றியதை போல, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசை காப்பாற்ற ரமேஷ் குமார் ஒத்துழைக்கவில்லை. ரமேஷ்குமார் வரலாற்றின் பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் களங்கம் இருக்கக்கூடாது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

  ராஜினாமா கடிதம்

  ராஜினாமா கடிதம்

  எழுபது வயதுக்கும் மேலான வயது முதிர்ந்த ரமேஷ் குமார், தனது உடல்நிலையை பற்றி கவலைப்படாமல், திங்கள்கிழமை இரவு 11.45 மணி வரை சட்டசபையில் இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படியாவது நடத்தி விடுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அப்போதும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக இல்லாததால், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு கிளம்பினார் சபாநாயகர். அதுமட்டுமா, இன்று மட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முடியாவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை சமர்ப்பிப்பதற்கு தயாராகவும் வந்திருந்தார். இன்று மாலை சட்டசபை நிகழ்வின் போது அந்த கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவிடம் எடுத்துக் காட்டினார்.

  நகைச்சுவை

  நகைச்சுவை

  ஒரு ஸ்ட்ரிக்ட்டான தலைமையாசிரியர் போல, சபையை நடத்தியவர்தான் ரமேஷ்குமார். அதேநேரம் வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை துணுக்குகளை, அள்ளி தெளித்து, அவையை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதிலும் அவர் தவறுவதில்லை. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாதான் தனக்கு முன்னோடி என்று நெருக்கமானவர்களிடம் ரமேஷ்குமார் கூறியதாக தகவல் உண்டு. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த, பரபரப்பான ஒரு சூழ்நிலையிலும் கூட தனது வழக்கமான 'கூல்' தன்மையை விட்டுக் கொடுக்கவில்லை அவர்.

  ஒரு ஓட்டுதாம்ப்பா

  ஒரு ஓட்டுதாம்ப்பா

  ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க எழுந்துநின்ற எம்எல்ஏக்களை சட்டசபை அலுவலர்கள் எண்ணிக்கொண்டிருந்தபோது, பாஜகவை சேர்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் உடல் பருமனாக இருப்பது குறிப்பிட்டு "ஏம்பா அவரை ஒரு ஓட்டு என்று எண்ணவும்.. இரு ஓட்டு என்று எண்ணி விடாதீர்கள்" என்றார் ரமேஷ் குமார். அந்த டென்ஷனுக்கு நடுவே, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட இதைக் கேட்டு சிரித்து விட்டனர் என்றால் சட்டசபையை எந்த அளவுக்கு அவர் நடத்திச் செல்பவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

  அசரவில்லையே மனிதர்

  அசரவில்லையே மனிதர்

  இறுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான ஓட்டு எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போது கூட, அவரது முகத்தில் எந்த ஒரு பதற்றம் காணப்படவில்லை. இத்தனைக்கும் ஆட்சி கவிழ்ந்தால், சபாநாயகர் இருக்கையை காலி செய்து விட்டு எதிர்க் கட்சி வரிசையில் சென்று அமர வேண்டிய நிலையில் இருந்த போதிலும், எதன் மீதும் பற்றற்று இருக்கக்கூடிய ஒரு ஞானியைப் போல முகத்தை வைத்திருந்தார் ரமேஷ் குமார். கண்டிப்பாக சமகால அரசியலில், நியாயம், தர்மம் இவற்றுக்கு முக்கியத்துவம் தருபவர்கள் யாராவது சிலர் இருந்தால், அதில் கர்நாடக சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் பெயரும் கண்டிப்பாக இடம்பெறும் என்பது உறுதி.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Ramesh Kumar, former speaker of Karnataka assembly who won the hearts of the state people as he never slipped from the justice path.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more