2024 தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 ஆக, மகாராஷ்டிரா 3 ஆக உ.பி.4 ஆக பிரியும்-பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி
பெங்களூர்: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின் கர்நாடகா 2 மாநிலங்களாகவும் உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகவும் பிரிக்கப்படும் என்று கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டி பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிரிக்கப்படும் என்கிற பேச்சு உள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தின் எல்.முருகனும் அமைச்சரானார். அப்போது மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது.

தமிழகத்தில் ஏற்கனவே வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு பிரிவினை கோரிக்கை இருந்தது. இந்த நிலையில் பாஜக, கொங்குநாடு கோரிக்கையை முன்வைக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன் பாஜக தலைவர்கள் பலரும் கொங்குநாடு - தனி மாநிலத்துக்கு ஆதரவாக கருத்துகளை கூறி இருந்தனர். பின்னர் இந்த சர்ச்சை அடங்கியது.
இந்நிலையில் கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டா மாநிலங்கள் பிரிவினை தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. இது தொடர்பாக உமேஷ் கட்டி கூறியதாவது: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாடு 50 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அப்படி பிரிக்கப்படும் போது வட கர்நாடகா தனி மாநிலமாக உருவாகும்.
கட்சியை காப்பாற்ற வா தலைவா.. எம்ஜிஆர் சிலையை கட்டி பிடித்து கண்ணீர் விட்ட சுசீந்திரன்- வீடியோ
2024-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பல புதிய மாநிலங்களை உருவாக்குவார்; மகாராஷ்டிரா 3 மாநிலங்களாக பிரிக்கப்படும். உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படும். மொத்தம் 50 புதிய மாநிலங்கள் உருவாக்கப்படும்.
பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது; வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது; மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியவில்லை. வட கர்நாடக வளமிக்கது. பொதுமக்கள் அனைவரும் வட கர்நாடகா தனி மாநில கோரிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு உமேஷ் கட்டி கூறினார்.