பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பேத்தி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா (வயது 30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெங்களூர் ஹைகிரவுண்ட்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகள்தான் சவுந்தர்யா. பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் சவுந்தர்யாவுக்கு நிரஞ்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மத்திய பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் கல்லூரி அருகே வசந்த் நகரில் கணவர் நிரஞ்சனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் சவுந்தர்யா. நிரஞ்சன்-சவுந்தர்யா தம்பதியினருக்கு நான்கரை மாத கைக்குழந்தை உள்ளது.

எடியூரப்பா பேத்தி தற்கொலை
இந்நிலையில் இன்று தமது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் மின்விசிறியில் சவுந்தர்யா தூக்கிட்ட நிலையில் இருப்பதை உறவினர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து சவுந்தர்யாவின் உடலை இறக்கி பெங்களூரு பவுரிங் லேடி கர்சன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சவுந்தர்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விரைந்தார் முதல்வர்
எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாஜகவில் மட்டுமல்ல, கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை கேள்விப்பட்டதும் முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.சவுந்தர்யாவின் உடல் தற்போது பெங்களூரு பவுரிங் லேடி கர்சன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூர் ஹைகிரவுண்ட்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் சொல்வது என்ன?
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இன்று காலை 10 மணிக்கு வீட்டு பணியாளர்கள் கதவை தட்டியும் சவுந்தர்யா திறக்கவில்லை. நீண்டநேரமாக கதவு திறக்காததைத் தொடர்ந்து கணவர் நிரஞ்சனுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சவுந்தர்யாவை நிரஞ்சன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை. இதனையடுத்து நிரஞ்சனும் வீட்டுக்கு விரைந்து வந்தார். அவரிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் வீட்டை திறந்தார். அப்போது மின்விசிறியில் சவுந்தர்யா தூக்கில் தொங்கியதை கண்டு நிரஞ்சனும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இப்போதைக்கு ஒட்டுமொத்த குடும்பமும் சவுந்தர்யாவின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சவுந்தர்யாவின் இறுதி சடங்குகளுக்கு பின்னரே முறைப்படியான விசாரணைகள் தொடங்கும் என்றனர்.

உடல்நலன் பிரச்சனை
இச்சம்பவம் தொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதாவது: பிரசவத்துக்கு பிந்தைய உடல்நலன் சார்ந்த மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகள் சவுந்தர்யாவுக்கு இருந்து வந்தது. சவுந்தர்யாவின் உடல்நலன் பாதிப்பு எங்கள் அனைவருக்குமே நன்றாகவே தெரியும். இதில் சந்தேகம் எதுவுமே இல்லை. சவுந்தர்யாவும் அவரது கணவரும் நல்ல தம்பதிகளாகவே வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே பிரச்சனை எதுவும் இல்லை. இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.