பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் பாடம் நீக்கம்! மதவெறியை புகுத்தும் பாஜக! வைகோ கடும் கொந்தளிப்பு..!
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்திலிருந்து தந்தை பெரியார் நாராயண குரு ஆகியோரின் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் பேச்சுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து உள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் உரையை பள்ளிப் பாடப்புத்தகங்களில் சேர்ப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீ நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய பாடங்கள் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனை- அடுத்த அதிரடியை காட்டும் முதல்வர் ஸ்டாலின்! பிரஸ் மீட்டில் ஓபனாக சொன்ன வைகோ!

வைகோ கண்டனம்
இதற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், " பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், உண்மையான வரலாறுகளை மறைத்து, மதவெறிப் பார்வையில் திரித்து எழுதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் எழுதிக் கொடுப்பதை, கற்பனைப் புராணங்கள், இதிகாசங்களை, வரலாறாகக் கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். குருகுலக் கல்வியை நிலை நாட்டுகின்ற வகையில் புதிய பாடத்திட்டத்தைக் கற்பிக்க முனைகின்றார்கள்.

கர்நாடக பாடத்திட்டம்
செத்துப்போன சமஸ்கிருத மொழியை உயிர்ப்பிக்க 650 கோடி ரூபாய் செலவில் மூன்று பல்கலைக்கழகங்களை நிறுவி இருக்கின்றார்கள். அந்த வழியில் கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசு, தன் பங்குக்கு, கர்நாடக மாநில வரலாறைத் திரிக்க முயற்சிக்கின்றது. ஆங்கில அரசை எதிர்த்துப் போர் புரிந்து வீர வரலாறு படைத்த திப்பு சுல்தான் குறித்த பாடங்களை, ஒன்று முதல் பத்து வரை பள்ளிப் பாடங்களில் இருந்து ஏற்கெனவே நீக்கி விட்டார்கள்.

ஆர்எஸ்எஸ் ஹெட்கேவார்
அடுத்து இப்போது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சமூகச் சீர்திருத்தம் என்ற தலைப்பின் கீழ் இருந்த தந்தை பெரியார், கேரளத்தின் நாராயண குரு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளை நீக்கி விட்டனர். மறைந்த ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் பேசியதை பாடமாக ஆக்கி இருக்கின்றார்கள். சமூக சீர்திருத்தம் என்ற பெயரில், முழுக்க முழுக்க மதச்சார்பு அமைப்புகளைப் பற்றி எழுதி இருக்கின்றார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.

மறைத்து விட முடியாது
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறைகளைத் தூண்டி பிஞ்சுக் குழந்தைகள் மாணவர்கள் மனங்களில் மதவெறியைப் புகுத்த முனைகின்ற கர்நாடக பாரதிய ஜனதா கட்சி அரசின் முயற்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவர்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும், தந்தை பெரியார், நாராயண குரு ஆகியோரின் பெயர்களை, அவர்கள் நிகழ்த்திய சமூக சீர்திருத்த புரட்சியை, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைத்து விட முடியாது" என அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.