கர்நாடகாவிலும் “புல்டோசர்” மாடல்.. ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டில் இஸ்லாமியர்கள் வீடுகள் இடிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக கூறி இஸ்லாமியர்களின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பெரும்பாலான மக்களால் உச்சரிக்கப்படும் வார்த்தையாக புல்டோசர் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தொடங்கிய புல்டோசர் மாடல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது.
இறுகும் பிடி.. விசாரணைக்கு ஆஜராகாத நுபுர் சர்மா.. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய கொல்கத்தா போலீஸ்

உத்தரப்பிரதேச மாடல்
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக உத்தரப்பிரதேச அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்கள், போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார மேடைகளிலும் கூட புல்டோசர் குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றன. இந்த நடவடிக்கையை பெருமையாகவே யோகி அரசு பேசி வந்தது.

மத்திய பிரதேசம்
இதன் தொடர்ச்சியாக ராமநவமி ஊர்வலங்களின்போது நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் ராம நவமி வன்முறைக்கு காரணம் என்று கூறி அங்குள்ள இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளை அம்மாநில பாஜக அரசு தகர்த்தது. அதில், கால் இல்லாத ஒருவர் கலவரம் செய்ததாக கூறி அவர் கடை தகர்க்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லி
அதன்பின்னர் டெல்லி சஹாரன்பூரிலும் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது கலவரம் செய்ததாக கூறி இஸ்லாமியர்களின் வீடுகளையும் கடைகளையும் மாநகராட்சி நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியது. தொடர்ச்சியாக உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் நபிகள் நாயகம் மீதான அவதூறை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்களின் வீடுகளும் இடித்து நொறுக்கப்பட்டன.

கர்நாடகா
இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஹிஜாப், ஹலால், ஒலிபெருக்கி என அடுத்தடுத்து மதம் சார்ந்த சர்ச்சைகள் தொடர்ந்து வந்த சூழலில், பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, உத்தரப்பிரதேசத்தின் புல்டோசர் மாடலை கொண்டு வர வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தகர்க்கப்பட்டது.

நகராட்சி விளக்கம்
எந்தவிதமான முறையான முன்னெச்சரிக்கையும் இன்றி வீடுகள் இடிக்கப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள நகராட்சி ஆணையர், ஏமாற்றி இந்த நிலத்தை விற்பனை செய்துவிட்டனர். கடந்த ஆண்டே வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பினோம்." என்றார்.