ஆசிட் வீசிவிட்டு ஆசிரமத்தில் அடைக்கலம்... காவி உடையணிந்த குற்றவாளியை மடக்கிப்பிடித்த காக்கிகள்
பெங்களூரு: காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தலைமறைவான இளைஞரை ஆசிரமத்திற்குள் சென்ற போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ்.
ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான்
இவர் அதே பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்து இருக்கிறார்.

காதல் மிரட்டல்
இவரது காதலுக்கு இளம்பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் கேட்காத நாகேஷ் இளம்பெண்ணை அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்றும், அவரது வீட்டிற்கு சென்றும் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் பல முறை எச்சரித்தும் இதை நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆசிட் வீச்சு
இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என பெண்ணை நாகேஷ் மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து இளம்பெண் மீது நாகேஷ் வீசி எரிந்துவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார்.

நோட்டீஸ் ஒட்டி தேடிய போலீஸ்
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து நாகேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றவாளியின் புகைப்படத்தையும் அவர் குறித்த தகவலையும் பல இடங்களில் ஒட்டி பொதுமக்கள் பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் தெரிவித்திருந்தனர். திருவண்ணாமலை நகர கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடப்படும் குற்றவாளி என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

ஆசிரமத்தில் கைது
இதனைக் கண்ட ஒருவர் நாகேஷ் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்திற்கு அடிக்கடி தியானத்திற்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார். அந்த ரகசிய தகவலின் படி இன்று போலீசார் மாற்று உடையில் தியான மண்டபத்திற்குள் நுழைந்து காவி உடையணிந்து தியானத்தில் ஈடுபட்ட குற்றவாளியான நாகேஷை கைது செய்து கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.