தனியார் நிறுவனங்களும் நாட்டின் சொத்து.. தனியாரை அவமதித்தவர்களுக்கு பெங்களூரு ஒரு பாடம் -பிரதமர் மோடி
பெங்களூரு: தனியார் நிறுவனங்களை மதிக்காதவர்களுக்கு பெங்களூரு மாநகரம் நல்ல பாடமாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ரூ.27,000 கோடி மதிப்பிலான மத்திய அரசின் 5 நெடுஞ்சாலை மற்றும் 7 ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், "இந்தியாவின் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெங்களூரு கனவு நகரமாக திகழ்கிறது.

ஒரே இந்தியாவுக்கான பிரதிபலிப்பாக பெங்களூரு இருக்கிறது. பெங்களூரு நகரத்தின் வளர்ச்சி லட்சக்கணக்கானவர்களின் கனவுகளை வளர்க்கிறது. எனவேதான் கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பெங்களூருவின் வளர்சிக்காக இடைவிடாமல் பாடுபடுகிறது.
டபுள் எஞ்சின் அரசாங்கம் இருப்பதால் ரயில்வே, சாலை, மெட்ரோ, மேம்பாலம், சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு டிராபிக் ஜாம் இல்லாமல் பெங்களூரு இருக்கிறது. புறநகர் பகுதிகளையும் பெங்களூருவுடன் இணைப்பதற்கான பணிகளை செய்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வந்தாலும் டபுள் எஞ்சின் அரசாங்கம் இருப்பதால் உடனே அவற்றை செய்து முடிக்க முடிகிறது.
40 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திட்டங்களை 40 மாதங்களில் முடித்துக்காட்டுவோம். கடந்த 8 ஆண்டுகளில் ரயில்வே இணைப்புகள் முற்றிலுமாக உருமாறியுள்ளன. இந்திய ரயில்வே வேகமாகவும், தூய்மையாகவும், நவீனமாகவும், பாதுகாப்பாகவும், குடிமக்களுக்கு எளிதாகவும் கிடைக்கிறது. நாம் சிந்தித்தே பார்க்க முடியாத சிக்கலான இடங்களுக்கெல்லாம் ரயில்களை இயக்கிவிட்டோம்.
விமான நிலையங்கள், விமானங்களில் இருப்பதை போன்ற அனுபவத்தை ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் வழங்க இந்திய ரயில்வே முயற்சித்து வருகிறது. கதி சக்தி திட்டம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. பெங்களூரு நகரத்தின் வெற்றி 21 ஆம் நூற்றாண்டில் தற்சார்பு இந்தியாவுக்கான உந்துகோளாக இருக்கிறது.
பெங்களூரு தொழில், கண்டுபிடிப்பு போன்றவற்றில் வளர்வதற்கு பின்னால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்குகள் உள்ளன. இந்தியாவின் தனியார் நிறுவனங்களை அவமதித்து வருவபர்களுக்கு பெங்களூரு நகரம் பாடமாக இருக்கிறது. அரசு நடத்தும் நிறுவனமாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி, இரண்டுமே நம் நாட்டின் சொத்துக்கள் என்பதில் உறுதியாக நம்புகிறேன். இரண்டுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்." என்றார்.