கார் வாங்க சென்ற விவசாயி.. 'பாக்கெட்ல 10 ரூபாயாவது இருக்கா'.. சேல்ஸ்மேன் நக்கல்.. விவசாயி செம பதிலடி
பெங்களுரு: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட திரைப்படம் நப்புக்காக. இந்த படத்தின் ஒரு காட்சியில் 'விஜயகுமாரும், சரத்குமாரும் கார் வாங்குவதற்காக ஒரு ஷோரூமுக்கு செல்வார்கள்.
அப்போது அங்குள்ள சேல்ஸ்மேன் 'என்ன நீங்க காரு வாங்க போறீங்களா' என்று அவர்களின் தோற்றத்தையும், செயலையும் வைத்து கடுமையாக கிண்டல் செய்வார். பின்னர் அவர்கள் ஒரு சாக்கு மூட்டையில் இருந்து கட்டு, கட்டாக பணத்தை கொட்டுவதை பார்த்து சேல்ஸ்மேன் வாயடைத்து போவார். உருவ தோற்றத்தை வைத்து யாரையும் மட்டம் தட்டக்கூடாது என்பதை உண்னர்த்தும் வகையில் இந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க! சென்னை ஆட்டோ டிரைவரை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா -செம பின்னணி

சேல்ஸ்மேன் நக்கல்
இந்த சினிமா காட்சியை போல் கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் துமகுருவை சேந்தவர் கெம்பேகவுடா. விவசாயியான இவர் பொலிரோ பிக்-அப் கார்பற்றி விசாரிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள மஹிந்திரா ஷோரூமூக்கு சென்று இருந்தார். விவசாயி உள்ளே சென்றது முதல் அங்குள்ள சேல்ஸ்மேன் இவரை ஏற, இறங்க நக்கலாக பார்த்துள்ளார்.

பாக்கெட்ல 10 ரூபா இருக்கா?
பொலிரோ பிக்-அப் கார் விலை குறித்து விவசாயி கெம்பேகவுடா சேல்ஸ்மேனிடம் கேட்டார். இதற்கு சேல்ஸ்மேன், ' என்ன நீ கார் வாங்க போறியா.. இதோட விலை என்ன தெரியுமா? 10 லட்ச ரூபாய். உன் பாக்கெட்ல ஒரு 10 ரூபாயாவது இருக்கா?.. இந்த லட்சணத்துல கார் வாங்க கிளம்பி வந்துட்டான். சீக்கிரம் வெளியே கிளம்பு '' என்று கெம்பேகவுடா தோற்றத்தை வைத்து அவரை கடுமையாக கிண்டல் செய்தார்.

ஒரு மணி நேரத்தில் 10 லட்சம்
சேல்ஸ்மேனின் இந்த மோசமான செயல் விவசாயி கெம்பேகவுடாவுக்கு கோபத்தை உண்டாக்கியது. ''என்னையா கேவலமா பேசுற.. ஜஸ்ட் ஒரு மணி நேரத்துல பணத்துடன் வருகிறேன். காரை ரெடியாக வைத்திரு'' என்று அவர் சேல்ஸ்மேனின் கூறவிட்டு வேகமாக கிளம்பி சென்றார். பின்னர் கூறியபடி ஒரு மணி நேரத்துக்குள் கட்டு, கட்டாக 10 லட்சம் பணத்துடன் திரும்பினார்.

கொடுத்த தரமான பதிலடி
விவசாயி கெம்பேகவுடாவும், அவரது நண்பர்களும் சேல்ஸ்மேன் மன்னிப்பு கேட்கும்படி கூறினார்கள். இதனை தொடர்ந்து விவசாயியை கிண்டல் செய்ததற்காக சேல்ஸ்மேன் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து ''உங்கள் ஷோரூமில் கார் வாங்க நான் விரும்பவில்லை'' என்று தன்னை கிண்டல் செய்த சேல்ஸ்மேனுக்கு மரண பதிலடி கொடுத்து விட்டு அங்கு இருந்து நடையை கட்டினார் விவசாயி கெம்பேகவுடா.

ஆனந்த் மஹிந்திராவுக்கு அனுப்பினார்கள்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. விவசாயியை சேல்ஸ்மேன் அவமானப்படுத்தியற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ''கிராம மக்கள்னா உங்களுக்கு கேவலமாக போச்சா'' என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் டுவிட்டர் பக்கத்துக்கு நெட்டிசன்கள் பலர் டேக் செய்து வருகின்றனர்.