சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- உணவு உண்கிறார்... துணையுடன் நடக்கிறார்... விக்டோரியா மருத்துவமனை
பெங்களூரு: சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் எழுந்து உட்காருகிறார்; துணையுடன் நடக்கிறார் என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்யும் சசிகலா வரும் 27-ந் தேதி விடுதலையாக உள்ளார். இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடக்கத்தில் சசிகலாவின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; உணவு உட்கொள்கிறார்; அவரால் உட்கார முடிகிறது; துணையுடன் எழுந்து நடக்கிறார். ஆக்சிஜன் அளவு 98% உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுடன் சிறையில் இருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவருக்கும் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.