சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது.. சாப்பிட முடிகிறது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
பெங்களூர்: பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை இன்று காலை தகவல் தெரிவித்து உள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக, சிறையிலிருந்து, கடந்த வியாழக்கிழமை பெங்களூரு பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சசிகலா.
அங்கு பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று கூறப்பட்டாலும் மூச்சுத்திணறல் மற்றும் சில அறிகுறிகள் காரணமாக சிடி ஸ்கேன் எடுத்து பார்க்குமாறு அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.

அவசர சிகிச்சை
இதையடுத்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன பிரச்சினை
இந்த நிலையில், அப்போது விக்டோரியா அரசு மருத்துவமனை சார்பில் சசிகலா உடல்நிலை பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறி இருப்பதைப் பாருங்கள்: கொரோனா நோய் தொற்று இருப்பது, மோசமான நிமோனியா பாதிப்பு, டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் சசிகலாவுக்கு இருக்கிறது.

சாப்பிட முடிகிறது
கொரோனா சிகிச்சை வழிகாட்டு முறைப்படி அவசரகால சிகிச்சை பிரிவில் வைத்து சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதம் என்ற அளவுக்கு இருக்கிறது. சசிகலா விழிப்போடு இருக்கிறார். அவர் தனது வாய் மூலமாக (நரம்புகள் மூலமாக அன்றி) சாப்பிட முடிகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சசிகலா தமிழகம் வருவது எப்போது?
நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருந்தது. இந்நிலையில், அவர் பல்வேறு நோய் காரணமாக மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் 10 நாட்கள் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய அவசியம், இருக்கும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே சசிகலா தமிழகம் வருவதற்கு தாமதமாகும் என்று கூறப்படுகிறது.