ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாகிறார்.. உறுதி செய்த சிறைத் துறை
பெங்களூர்: ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதை பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறைச் சென்ற அவருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பரோலில் முதல்முறையாக சசிகலா வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து நடராஜன் இறப்பின் போது 2018-ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம்தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

விடுதலை
இந்த நிலையில் அவர் பரோல் சென்ற காலங்களை கழித்துக் கொண்டும் ஜெயலலிதா இருந்த போது அவர் பெற்ற தண்டனை காலத்தை கணக்கில் கொண்டும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாவார் என சிறைத் துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சிவாஜி நகர்
முன்னதாக சசிகலா செலுத்த வேண்டிய ரூ 10 கோடி அபராதத் தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் கடந்த 20-ஆம்தேதி சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதலில் சிவாஜிநகரில் உள்ள கர்சன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவர்கள்
அங்கு சிடி ஸ்கேன் வசதிகள் இல்லாததால் அவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கமும் மூச்சுத் திணறலும் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சசிகலா மருத்துவமனை
விடுதலை தேதிக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது விடுதலை தாமதமாகும் என கருதப்பட்டது. ஆனால் அவர் வரும் 27-ஆம் தேதி விடுதலை ஆவார் என பெங்களூர் சிறைத் துறை நிர்வாகம் உறுதி செய்தது.

விக்டோரியா மருத்துவமனை
இதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று சிறைத் துறையினர் சசிகலாவிடம் விடுதலைக்கான கையெழுத்தை பெற்று அதன் ஒரு நகலை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவதாகவும் சிறை துறை தெரிவித்துள்ளது.

மறுப்பு
முன்னதாக சசிகலாவை விக்டோரியா மருத்துவமனையிலிருந்து வேறு தனியார் மருத்துவமனைக்கு மாற்றுமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் வசதிகள் இருப்பதாகவும் சிறை கைதிகள் போலீஸ் காவலில் வைத்து அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துவிட்டது.

தடை இல்லை
ஆனால் 27ஆம் தேதிக்கு பிறகு அதாவது விடுதலைக்கு பின்னர் சசிகலா விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என தற்போது சிறைத் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா விடுதலையான பிறகு கணவர் நடராஜனின் நினைவிடத்தையும் ஜெயலலிதாவின் நினைவிடத்தையும் பார்வையிடுவார் என தெரிகிறது.