நினைத்தது நடந்தது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கே வெற்றி.. எப்படி தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களை, தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பால் வெற்றி பெற்றது சபாநாயகர் தரப்பு கிடையாது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்புக்குதான், சாதகம் என்ற தகவல் கண்டிப்பாக, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை.
அது எப்படி என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? விஷயம் இதுதான்:

கர்நாடக கலாட்டா
கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்ற போது, எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது மகாராஷ்டிராவில் சிக்கல் எழுந்ததே, அதேபோலத்தான் கர்நாடகாவிலும் அப்போது, எந்த கட்சியை ஆட்சி அமைக்க, அழைப்பது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 105 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த, பாஜகவை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ராஜினாமா செய்து கலைந்து போனது.

17 பேர் எஸ்கேப்
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்தன. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி முதல்வராக இருந்தார். ஆனால், கடந்த ஜூலை மாதம் திடீரென காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்களும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் ஆக மொத்தம் 17 பேர் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொள்ள சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவுக்கு கூட சென்றனர்.
17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி

தகுதி நீக்கம்
ஆனால் இவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காத நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொண்டார் குமாரசாமி. ஆனால், அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கலைந்து போனது. இதனால், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும், தாங்கள் பிறப்பித்த கொறடா உத்தரவை மதிக்காமல் சட்டசபைக்கு 17 பேரும் வராத காரணத்தால், அவர்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் புகார் அளித்தனர். இதை ஏற்று 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இடைத் தேர்தலில் போட்டி
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில்தான் சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் ரமேஷ்குமார் எடுத்த தகுதிநீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சபாநாயகர் தரப்புக்கு வெற்றி என்பது போல தோன்றலாம். ஆனால், யதார்த்தம் அப்படி கிடையாது. ஏனெனில், இந்த 17 பேரும், நடப்பு சட்டசபை பதவிக்காலம் முடிவடையும்வரை, தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இவர்களால், போட்டியிட முடியும்.

விரும்பியது நடக்கிறது
17 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தது, இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான். ஒருவேளை இவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தால்தான், அது இந்த எம்எல்ஏக்களுக்கு பாதகமான தீர்ப்பாக முடிந்திருக்கும். ஆனால் எம்எல்ஏக்கள் தானாக முன்வந்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இப்போது உச்ச நீதிமன்றம் அதை ராஜினாமா என்று கருதாமல் தகுதிநீக்கம் என்று கூறியுள்ளது, அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி அந்த எம்எல்ஏக்கள் விரும்பியபடியே இப்போது தேர்தலில் போட்டியிடவுள்ளனர். ஆகமொத்தம் அவர்கள் விரும்பியதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாகவும் நடக்கப் போகிறது. என்ன ஒரே ஒரு விஷயம் என்றால், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும்வரை அமைச்சராக முடியாது. அதுதான் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்புக்கு கிடைத்த ஒரே வெற்றி.

அமைச்சர்
இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அவர்கள் பாஜக அமைச்சரவையில் அமைச்சர்களாக முடியுமே தவிர, அமைச்சராகி விட்டு பிறகு இடைத்தேர்தலில் போட்டியிட்ட முடியாது. எனவே இந்த தீர்ப்பு 80% தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு சாதகமான தீர்ப்பு, 20% சபாநாயகர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு என்று எடுத்துக்கொள்ள முடியும், என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!