பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக நடவடிக்கை கூடாது.. சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக, 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீதும் சபாநாயகர் முடிவு எடுக்க கூடாது. அதேபோல 10 எம்எல்ஏக்களை தகுதி நீக்கமும் செய்ய கூடாது என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் சுமார் 11 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

அதில், 10 எம்எல்ஏக்கள் பேர் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒரு வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும், ராஜினாமா கடிதங்களை ஏற்க, சபாநாயகருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.

நேரில் ராஜினாமா கடிதங்கள்

நேரில் ராஜினாமா கடிதங்கள்

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள், சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து, விருப்பம் இருந்தால், தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை, வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தது. இதையேற்று, மும்பையிலிருந்து பெங்களூர் வந்த 10 எம்எல்ஏக்களும், சபாநாயகரிடம் நேரில் நேற்று ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

வீடியோ பதிவு

வீடியோ பதிவு

இந்த நிலையில், அவசர கதியில், விசாரணையை நடத்த முடியாது என கூறி, சபாநாயகர் ரமேஷ் குமார் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும், இன்றுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, எம்எல்ஏக்கள் 10 பேர் தன்னிடம் ராஜினாமா அளித்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த சபாநாயகர் அ்ந்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் தனது பதிலை, அறிக்கையாக, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர்கள்

மூத்த வழக்கறிஞர்கள்

இன்று ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். சபாநாயகர் சார்பில் காங்கிரஸ் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். கர்நாடக முதல்வர் சார்பில், ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டார்.

தகுதி நீக்கம்

தகுதி நீக்கம்

முகுல் ரோஹத்கி வாதிடுகையில்: சில சூழ்நிலைகளை தவிர, மற்ற விஷயங்களில் நீதிமன்றத்திற்கு சபாநாயகர் பதிலளிக்க கடமைப்பட்டவர். ராஜினாமா கடிதம் நிலுவையில் இருப்பதால் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக தொடருகிறார்கள். அவர்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. அதுதான் சபாநாயகரின் திட்டம். அப்படி செய்து அரசை காப்பாற்ற அவர் முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, நீதிமன்றம் திங்கள்கிழமை வரை கூட சபாநாயகருக்கு நேரம் கொடுக்கலாம். ஆனால், நடுவே, எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.

தலையிட முடியாதா

தலையிட முடியாதா

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "கர்நாடக அரசியல் விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தலையிட கூடாது என சபாநாயகர் நினைக்கிறாரா. நாங்கள் கையை கட்டிக் கொண்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என சபாநாயகர் நினைக்கிறாரா" என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அபிஷேக் சிங் வாதிடுகையில், "சபாநாயகர் எப்போது ராஜினாமாவை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் நிர்பந்திக்க முடியாது" என்றார்.

அப்படியே இருக்க வேண்டும்

அப்படியே இருக்க வேண்டும்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதியில் அளித்த உத்தரவு இதுதான்: சபாநாயகர் அதிகாரம் மற்றும் உச்சநீதிமன்ற அதிகாரம் தொடர்பாக அரசியல் சாசன விவகாரங்களை தீர ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, வரும் 16-ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) விசாரணையை ஒத்தி வைக்கிறோம். அதுவரை, அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவு எடுக்க கூடாது. அதேபோல 10 எம்எல்ஏக்களை தகுதி நீக்கமும் செய்ய கூடாது. இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

English summary
Karnataka Speaker Ramesh Kumar moved Supreme Court asking for more time to decide on these MLAs' resignation and Chief Minister HD Kuramaswamy put up a brave face claiming his government still has the numbers and he does not need to resign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X