கட்சி மாறும்;ஆட்சி மாறும்;குடும்பம் மாறாது! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சதீஷ் ஜார்கிஹோலி?யார் இவர்?
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகும் பட்சத்தில் அந்தப் பதவிக்கு சதீஷ் ஜார்கிஹோலி தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் கசியத் தொடங்கியுள்ளது. யார் இவர்? இவரது பின்னணி என்ன?
கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் நாற்காலியில் யார் அமர்ந்தாலும் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர்வார்கள் என்ற உறுதித் தன்மைக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத சூழல் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. எஸ்.ஆர். பொம்மை, ராமகிருஷ்ண ஹெக்டே, எடியூரப்பா, குமாரசாமி எனப் பலரை பட்டியல் போட முடியும். முழுமையாக ஆட்சிக் காலத்தை முடிப்பதற்கு முன்பே இவர்கள் கூட்டணி குழப்பம், ஊழல் எனப் பல காரணங்களால் ஆட்சியை இழந்துள்ளனர். விரைவில் இந்தப் பட்டியலில் சித்தராமையா இணைவதற்காக அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன.

முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக முடா நில ஊழல் புகார் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த மாநில ஆளுநர் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார். ஆகவே சித்தராமையாவின் பதவி நாற்காலி மீது கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. அவர், 'அரசியல் ரீதியான இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை சட்டப்படி முறியடிப்பேன்' என்று சொல்லி இருக்கிறார்.
2023இல் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதும் டிகே சிவக்குமார்தான் முதல்வராக முன்மொழியப்படுவார் என ஊடகங்கள் பல கூறின. அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியை உயிர்பிழைக்க வைக்கப் பலவகைகளில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தவர். எனவே இவர்தான் முதல்வர் என மேல்மட்டம் வரை உறுதியானது. ஆனால், இறுதியில் கட்சியின் சீனியர் என்ற வகையில் சித்தராமையா முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டர். 2023 மே மாதம்தான் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார் சித்தராமையா. ஒரு வருடம் 4 மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளது. அதற்குப் பதவியைப் பறிகொடுக்க இருக்கிறார் அவர்.
இவருக்கு அடுத்து யார் முதல்வர் என்ற போட்டியில் சதீஷ் ஜார்கிஹோலியின் பெயர் அடிபடுகிறது. கர்நாடக அரசியலில் இவரது குடும்பம் பலம் கொண்டதாகக் கருதப்படுகிறது. வட கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இவர் இப்போது சித்தராமையா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிறார். இதன் மூலம் இவரது குடும்பம் இழந்த செல்வாக்கை மீட்டுக் கொண்டு வந்திருந்தார்.
சொல்லப்போனால் 1998 முதல் அனைத்து அரசுகளிலும் அதிகாரம் மிக்க பதவிகளை அனுபவித்துள்ளது இவரது குடும்பம். கடந்த 2021இல் பாலியல் புகாரில் சிக்கிய இவரது சகோதரர் ரமேஷ், அந்த நெருக்கடி காரணமாகப் பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அரசியல் ரீதியாக இந்தக் குடும்பத்திற்கு சுமார் இரண்டரை ஆண்டுகளாகப் பின்னடைவு ஏற்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர ஜார்கிஹோலி குடும்பம் எல்லா அரசாங்கத்தின் அமைச்சரவைகளிலும் பதவிகளை அனுபவித்து வந்துள்ளது.
இதைப் பற்றி ஒருமுறை சதீஷ் ஜார்கிஹோலியின் மற்றொரு சகோதரர் லகான், கடந்த 2023இல் மீண்டும் சித்தராமையா அமைச்சரவையில் தனது அண்ணன் பங்கேற்றது குறித்துப் பேசும்போது "கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக எனது குடும்பம் சுமார் இரண்டு ஆண்டுகளாக அரசியல் அதிகாரத்திலிருந்து விலகி இருந்தது. என் மூத்த சகோதரர் சதீஷின் பதவியேற்பினால், நாங்கள் மீண்டும் அதிகார மையமாக மாறி இருக்கிறோம்"என்றார்.
இரண்டரை ஆண்டுகள் என்பது ஏதோ இரண்டு நூற்றாண்டுகள் என்பதைப் போல அவர் கவலை அடைந்து பேசியிருந்தார். அதிலிருந்தே இந்தக் குடும்பம் கர்நாடக அரசியலில் எந்தளவுக்குக் கோலோச்சியது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பல கட்சிகள் ஆட்சிக்கு வரலாம். அது பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் என எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் ஜார்கிஹோலி குடும்பம் கட்டாயம் இடம்பெற்றுவிடும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.

சதீஷ், காங்கிரஸ் கட்சியில் உள்ளார். மற்றொரு சகோதரர்கள் ராமேஷ் மற்றும் பாலசந்திரா பாஜகவில் இருக்கிறார்கள். இளைய தம்பி லகான் ஜார்கிஹோலி சுயேச்சையாக நின்று வென்றவர். இதனால் இந்தக் குடும்பம் கர்நாடக அரசியலில் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்படுகிறது. அரசியல் ரீதியாக இந்தச் சகோதரர்கள் பிளவுபட்டு இருந்தாலும், இக்கட்டான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் சேர்ந்துவிடுவர். யாரும் தேர்தல் களத்தில் இந்தச் சகோதரர்களை வீழ்த்த முடியாது. லக்கனை தவிர மற்ற மூவரும் 1998 முதல் அனைத்து அமைச்சரவைகளிலும் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர்.
1998இல் இருந்து ஒரு தேர்தலில் கூட இந்தச் சகோதரர்களை வெளி வேட்பாளர் ஒருவர் எதிர்த்து நின்று வெற்றிபெற்றதே இல்லை. அப்படி ஒரு சாதனையை இந்தக் குடும்பம் பெற்றுள்ளது. ஒருமுறை கோகாக் தொகுதியிலிருந்து மூத்த சகோதரர் ரமேஷை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் லக்கன். அதுகூட சொந்த சகோதரரிடம் அடைந்த தோல்விதான். இதைத் தவிர ரமேஷ், சதீஷ், பாலச்சந்தரை இதுவரை யாரும் தோற்கடித்ததே இல்லை. பசவராஜ் பொம்மை ஆட்சியில் நீர்ப்பாசன அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோலி. இவர் மீது 2021இல் பாலியல் புகார் எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். அது இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய சறுக்கல்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார் சதீஷ். இவர் இப்போது சித்தராமையா அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். ஜார்கிஹோலி குடும்பத்தின் 'மாஸ்டர் மைண்ட்' என்று இவரை அழைக்கிறார்கள். எல்லா அரசாங்கத்திலும் இந்த சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்தாலும் இதுவரை கர்நாடகாவின் முதல்வர் நாற்காலியில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் அமர்ந்ததில்லை. அதை சதீஷ் விரைவில் முறியடிப்பார் என அரசியல் வட்டாரம் பேசத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications