கர்நாடகாவை இரண்டாக பிரிக்கும் பிளான் இல்லைங்க.. உமேஷுக்கு இதே வேலையா போச்சு.. முதல்வர் பொம்மை பதில்
பெங்களூரு: வட கர்நாடகா தனி மாநிலமாக பிரிக்கப்படும் என்று அமைச்சர் உமேஷ் கட்டிவின் கருத்து குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
கர்நாடகா அமைச்சர் உமேஷ் கட்டி மாநிலங்கள் பிரிவினை தொடர்பாக பேசியுள்ள கருத்துகள் சர்ச்சையாகி உள்ளன. இதுதொடர்பாக உமேஷ் கட்டி கூறுகையில், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் நாடு 50 மாநிலங்களாகப் பிரிக்கப்படும் என்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது. அதற்கான நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார்.

அப்படி பிரிக்கப்படும் போது வட கர்நாடகா தனி மாநிலமாக உருவாகும். 2024ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடி பல புதிய மாநிலங்களை உருவாக்குவார். மகாராஷ்டிரா 3 மாநிலங்களாகவும், உத்தரப்பிரதேசம் 4 மாநிலங்களாகப் பிரிக்கப்படும். மொத்தம் 50 புதிய மாநிலங்கள் இந்தியாவில் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டது. மக்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் முடியவில்லை. பொதுமக்கள் அனைவரும் வட கர்நாடகா தனி மாநில கோரிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று பேசினார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
ஏற்கனவே மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்ற போது கொங்கு நாடு என்று வார்த்தை இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாடு பிரிக்கப்படுமா என்று சர்ச்சை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அப்போது பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் தமிழ்நாடு பிரிக்கப்படும் என்று கருத்து கூறினார். அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு மூன்றாக பிரிக்கப்பட வேண்டும் என்று கருத்து கூறினார். வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்ற வகையில் பிரிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான தேவை என்ன என்பது குறித்தும் பேசி வருகிறார்.
இதனால் கர்நாடக அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், வட கர்நாடகாவை தனி மாநிலமாக பிரிப்பது குறித்து அரசு தரப்பில் எந்த எண்ணமோ, திட்டமோ இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து பேசிய அவர், அமைச்சர் உமேஷ் கட்டி மாநிலங்களை பிரிப்பது குறித்து பேசுவது இதுவொன்றும் முதல் முறையல்ல. பல ஆண்டுகளாக இதைத்தான் அவர் பேசி வருகிறார். அவரே தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.