என்று முடியும் சாதிய ஏற்றத்தாழ்வுகள்.. குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பாத பெற்றோர்.. அதிர்ச்சி..!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அங்கன்வாடி உதவியாளராக நியமினம் செய்ததால், பெற்றோர் தங்களது குழந்தைகளை கல்வி கற்க அனுப்ப மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் நாடும் நகரமும் மக்களும் முன்னேற்றம் காணுவது போல் தோன்றினாலும், எல்லாமே வெளிபுற முன்னேற்றம் தான் என்பதை சில சம்பவங்கள் முகத்தில் அறைந்து சொல்லிச் செல்லும். பள்ளிகளில் சாதிக் கயிறு, தெருக்களில் தீண்டாமைச் சுவர், மாற்று மதத்தினருக்கு வாடகைக்கு வீடுகள் இல்லை, காதல் திருமணம் செய்தவர்கள் வெட்டிக் கொலை என நம்மை சுற்றி ஒவ்வொரு நாளும், சாதி மற்றும் மதம் விவகாரங்களால் மக்கள் பாதிப்பை சந்தித்துக் கொண்டே இருக்கின்றனர்.

அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில், அரசுப் பள்ளியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்ததால், சமைத்த உணவுகள் அனைத்தும் கீழே கொட்டப்படும். இது வெறும் காட்சிக்காக வைக்கப்பட்டதல்ல. உண்மையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தீண்டாமை கொடுமையால் அங்குள்ள சமையலரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்த அவலத்தை தான் இயக்குநர் அப்படி காட்சிப்படுத்தி இருந்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையும் உலுக்கியது.
தற்போது இதேபோல் கர்நாடகா மாநிலத்தின் பிதார் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹத்யாலா கிராமத்தில் அரசு அங்கன்வாடி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2019ஆம் ஆண்டு முதல் செயல்படாமல் இருந்த அங்கன்பாடி பள்ளி, அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கன்வாடி உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மிலானா பாய் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் தங்களது குழந்தைகளை தொடக் கூடாது என்று பெற்றோர் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்துள்ளனர். பள்ளி தரப்பில் எவ்வளவு முயற்சித்தும் குழந்தைகள் அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையறிந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கவும் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்கும் அசையாத கிராம மக்கள், குழந்தைகள் அங்கன்வாடிக்கு கல்வி கற்க மறுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.