பெங்களூரில் விஐடி பல்கலைக்கழகம்: 2015ல் மாணவர் சேர்க்கை
பெங்களூர்: விஐடி பல்கலைக்கழகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய வளாகத்தை அமைத்து வருகிறது. அங்கு 2015-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
விஐடி பல்கலைக்கழக புதிய வளாகத்தை பெங்களூருவில் தொடங்குவதற்கு கர்நாடக அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது.

இதன் மூலம், பெங்களூரின் கிழக்குப் பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்போது அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் 2015-ஆம் ஆண்டில் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு ஒருசில பி.டெக். படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும் என்றார் அவர்.
வேலூரில் உள்ள விஐடி பல்கலைகழகத்தில் பி.டெக் படிக்க இந்த கல்வியாண்டில் 1.94 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருப்பதாகவும் விஸ்வநாதன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1.66 லட்சம் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதியதாகவும், 4100 மாணவர்கள் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயின்றாலும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான் அதுவும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்தான் அதிகம் நுழைவுத் தேர்வு எழுதுவதாகவும் விஸ்வநாதன் தெரிவித்தார்