பேட்டி தந்ததோடு விடவில்லை ராகுல் காந்தி! பெங்களூர் விரைந்தார்! "ஓட்டு திருட்டு"க்கு எதிராக போராட்டம்
பெங்களூர்: கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருடப்பட்டுள்ளதாக ஆதாரங்களை ராகுல் காந்தி நேற்று வெளியிட்டார். இதையடுத்து இன்று ராகுல் காந்தி பெங்களூர் சுதந்திர பூங்காவில் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

நேற்று, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மீது வைத்தார். ஒரே முகவரியில் ஏராளமான வாக்காளர்கள், ஒரு வாக்காளின் பெயர் கூடுதல் பூத்களில் இடம்பெற்றிருப்பது, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல், பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
அதோடு தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவர் வாக்காளர் பட்டியலை வீடியோ கான்பரன்சிங் மூலம் காண்பித்து முன்வைத்தார். அதில் ‛‛கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் 9 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதியில் மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மகாதேவபுரா.
மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 1 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று முன்னிலை வகித்தது. ஆனால் கடைசியில் தோல்வி தான் கிடைத்தது. மகாதேவபுராவில் 1,00,250 ஓட்டுகள் திருடப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம். போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. போலி முகவரியில், ஒரே முகவரியில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன'' என்றார்.
இதையடுத்து கர்நாடகா மாநில தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பி அவரது குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை வழங்கும்படி கூறியுள்ளது. மேலும் ஆதாரங்களை தராத பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வார்னிங் செய்துள்ளது. இதற்கிடையே தான் இன்று ராகுல் காந்தி பெங்களூர் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூர் வந்த ராகுல் காந்தி, சுதந்திர பூங்காவில் போராட்டம் செய்தார்.
காங்கிரஸ்தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற பிசி மோகன் கடந்த ஆண்டு 4வது முறையாக வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 6,58,915 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் 6,26,208 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் பாஜகவின் பிசி மோகனிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் மன்சூர் அலிகான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications