வெடித்தது மொழி பிரச்சனை! திருமண ஊர்வலத்தில் புகுந்து கொடூர தாக்குதல்! பரபர கர்நாடகம்.. என்னாச்சி?
பெங்களூர்: மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் கன்னட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண ஊர்வலம் சென்றவர்கள் மீது மகாராஷ்டிரா ஏகிகரண் சமிதி எனும் கட்சியினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெலகாவி மாவட்டம் தாமனி கிராமத்தை சேர்ந்தவர் சித்து சாய்பன்னாவர். இவருக்கும் ரேஷ்மா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
நிர்மலா சீதாராமன் அறிவித்த பெட்ரோல் டீசல் விலை.. இன்றும் மாற்றமில்லை.. 7 நாளாக அதே விலையில் விற்பனை
இவர்கள் 2 பேருக்கம் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இரவில் மணமக்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

ஊர்வலத்தில் கன்னட பாடல்கள்
இந்த திருமண ஊர்வலத்தின்போது மேளதாளம், வாத்தியங்கள் முழங்க கன்னட பாடல்கள் பாடப்பட்டன. மணமக்களின் குடும்பத்தினர் நடனமாடி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் சன்னம்மா நகர் அருகே சென்றது. அப்போது மகாராஷ்டிரா எகிகரண் சமிதி (எம்இஎஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தை மறித்தனர்.

தாக்குதல்
கன்னட பாடல்கள் பாடவும், ஒலிக்கவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடனமாடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, காரில் இருந்த மணமகன் சித்துவையும் தாக்கிவிட்டு சென்றனர். இதில் 5க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னட அமைப்பினர் போராட்டம்
இதற்கிடையே கன்னட பாடல்கள் பாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை கண்டித்து நிப்பானி போலீஸ் நிலையம் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்இஎஸ் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து, நிப்பானி போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்இஎஸ் கட்சியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முதல்வர் கண்டனம்
இதுபற்றி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛எம்இஎஸ் செயல் கண்டனத்துக்குரியது. இந்த விஷயத்தில் போலீசார் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம். கன்னட மக்களுக்கு எதிரான செயலை ஒருபோதும் அரசு வேடிக்கை பார்க்காது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

பிரச்சனை ஏன்?
கர்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டமானது கர்நாடகம்-மகாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையாகவும் உள்ளது. இந்நிலையில் தான் பெலகாவி மாவட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி கட்சியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கர்நாடகம் மாநிலம் உதயமான தினத்தில் கருப்புகொடி போராட்டத்தை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது கன்னட மொழி பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமண கோஷ்டி மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.