மசூதிக்காக இடிக்கப்பட்ட 30,000 கோயில்களை மீட்போம்..முடிந்தால் நிறுத்துங்கள்! வலதுசாரி தலைவர் சர்ச்சை
பெங்களூர்: ஞானவாபி மசூதி விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், இது குறித்து கர்நாடகாவில் வலதுசாரி தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இது தொடர்பான வழக்கில் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், அதை வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், வீடியோ உடன் கூடிய ஆய்வு நடத்தத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோயில்களை மீட்போம்
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கர்நாடகான மாநிலத்தின் வலதுசாரிக் குழுவான ஸ்ரீ ராம் சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் இது குறித்துக் கூறியுள்ள கருத்துகளைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிரமோத் முத்தாலிக் கூறுகையில், "நாடு முழுவதும் மசூதிகள் கட்ட இடிக்கப்பட்ட 30,000 கோவில்களை நாங்கள் மீட்டுவிடுவோம். உங்களுக்குத் தைரியம் இருந்தால் எங்களை நிறுத்துங்கள்.

யாராலும் தொட முடியாது
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, ரத்தம் சிந்தப்படும் என்று எச்சரித்தீர்கள். அதற்கு என்ன ஆனது? இந்துக்களின் ஒரு சொட்டு ரத்தத்தைக்கூட உங்களால் எடுக்க முடியவில்லை. உங்களுக்குக் கொஞ்சமாவது வெட்கம் இருந்தால், முன்பு இடித்த எங்கள் கோவில்களைத் திரும்பக் கொடுங்கள். இனியும் இதுபோன்ற ஆணவத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களை யாரும் தொட முடியாது. அனைத்து கோவில்களையும் சட்டப்படி மீட்டெடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

மசூதிகள்
முன்னதாக கர்நாடக முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் நேற்றைய தினம் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். அதில் அவர், "36,000 கோவில்கள் அழிக்கப்பட்டு, அதன் மீது தான் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் வேறு இடத்தில் மசூதி கட்டி தொழுகை நடத்தட்டும், ஆனால் எங்கள் கோவில்களின் மேல் மசூதி கட்ட அனுமதிக்க முடியாது. இந்த 36,000 கோவில்களும் சட்டப்படி மீட்கப்படும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

மந்திர்-மஸ்ஜித் விவகாரம்
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே மந்திர்-மஸ்ஜித் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கர்நாடகாவில் மங்களூருவின் புறநகரில் உள்ள ஒரு பழைய மசூதியின் அடியில் இந்து கோவில் போன்ற கட்டிடக்கலை வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னரே மசூதிகள் இடிக்கப்பட்டு, கோயில்கள் கட்டப்பட்டதாகப் பல வலதுசாரி தலைவர்களும் பேசத் தொடங்கினர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக நாட்டில் கிணறுகள் அல்லது குளங்களைக் கொண்டு இருக்கும் பழங்கால மசூதிகள் குறித்த ரகசிய சர்வே நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கிணறுகளைக் கொண்டிருக்கும் மசூதிகள் குறித்த இந்தியத் தொல்லியல் துறையின் ரகசிய சர்வே எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளனர். இதன் மூலம் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தேவையற்ற வகுப்புவாத வெறுப்பு உணர்வு ஏற்படுவது தவிர்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.