For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநர்களை வைத்து எதிர் கட்சி மாநிலங்களை பதம் பார்க்கும் மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

- ஆர் மணி

சென்னை: ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு? என்பது 1950 கள் மற்றும் 1960 களில் திமுக வின் பிரசித்தி பெற்ற, முக்கியமான கோஷங்களில் ஒன்று. நரேந்திர மோடி அரசு மத்தியில் பதவியேற்ற கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் நடக்கும் காரியங்களை பார்க்கையில் திமுக வின் அந்த கோஷத்திற்கு இப்போது புத்துயிர் கிடைக்காதா என்று தான் குறைந்தபட்ச ஜனநாயக பண்புகள் கொண்ட எவரும் நினைப்பர்.

ஆம் ... 2014 மே மாதம் மத்தியில் மோடி அரசு பதவியேற்ற பின்னர் நடக்கும் காரியங்கள், ஆளுநர் பதவி என்பது எந்தளவுக்கு மத்திய அரசு நினைத்தால் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பதை நாட்டுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆளுநர்களை வைத்து எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு எவ்வளவு தூரத்திற்கு இம்சை செய்ய முடியுமோ அவ்வளவு தூரத்திற்கு இன்றைக்கு இம்சை செய்து கொண்டிருக்கிறது.

BJP and Governor appointments

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மேற்கு வங்கம், புதுச்சேரி, டில்லி, திரிபுரா மற்றும் தமிழ் நாடு என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். நேற்றைக்கு - ஜூலை 5, 2017 - மட்டும் இரண்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆளுநர்களால் அவமானப் படுத்தப்பட்டும், சம்மந்தப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

முதலில் மேற்கு வங்கத்தை எடுத்துக் கொள்வோம். மேற்கு வங்கத்தின் ஆளுநர் கே.என். திரிபாதி. இவர் ஒரு பக்கா ஆர்எஸ்எஸ் காரர். ஜூலை 6 ம் தேதி முதலமைச்சர் மமதா பானர்ஜியை நேரில் அழைத்து மேற்கு வங்கத்தின் முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றான வடக்கு 24 பரகானாஸ் பகுதியில் நடைபெற்று வரும் மத கலவரங்கள் பற்றி ஆளுநர் கேட்டிருக்கிறார். ''ஆளுநர் இந்த விவகாரத்தை பற்றி கேட்டார். நான் விளக்கம் சொன்ன போது, என்னை மிரட்டும் விதத்தில் ஆளுநர் பேசினார். அவரது பேச்சின் தொனி கடுமையான மிரட்டல் விடுப்பதாக இருந்தது. ஆளுநர் ஒரு ஆளுநராக என்னிடம் பேசவில்லை. மாறாக பாஜக வின் பகுதி செயலாளர் பேசுவது போல இருந்தது. ஒரு கட்டத்தில் நானே ராஜினாமா செய்து விடலாம் என்று கூட நினைத்தேன் .... அந்தளவுக்கு ஆளுநர் பேசினார். ஆனால் நான் ராஜினாமா செய்யப் போவதில்லை ... ஏனெனில் என்னை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி முதலமைச்சராக ஆக்கியது மேற்கு வங்கத்தின் மக்கள் தானே தவிர, பாஜக வோ அல்லது ஆளுநர் திரிபாதியோ கிடையாது'' என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார் மமதா பானர்ஜி.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர், மத்திய அரசின் ஏஜெண்டாக கருதப்படும் ஆளுநர் பற்றி இவ்வளவு தூரம் வெளிப்படையாக குற்றச் சாட்டுகளை பொது வெளியில், அதாவது செய்தியாளர்கள் சந்திப்பில் சுமத்துவது என்பது சம கால இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூட நாம் கூறலாம். ஆனால் மமதா வின் இந்தக் குற்றச் சாட்டை மேற்கு வங்க ஆளுநர் மாளிகை வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பு கடுமையாக மறுக்கிறது. ''என்ன நடந்து கொண்டிருக்கிறது வடக்கு 24 பரகானாஸ் பகுதியில் என்று தான் ஆளுநர் முதலமைச்சரிடம் கேட்டார். மேலும் ஆளுநரின் தொனி கண்ணியமானதாகவே இருந்தது. இதுதான் உண்மை. இப்படி இருக்கையில் முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆளுநர் மீது சுமத்தியிருக்கும் குற்றச் சாட்டு ஆச்சரியமானதாக இருக்கிறது'' என்கிறது ஆளுநரின் செயலர் பத்திரிகைகளுக்கு கொடுத்திருக்கும் செய்திக் குறிப்பு.

BJP and Governor appointments

இதே ஜூலை 6 ம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி செய்த ஒரு காரியமும் பாஜக தவிர்த்த அனைத்து எதிர்கட்சிகளிடம் இருந்தும் கடுமையான கண்டனத்தை வரவழைத்திருக்கிறது. புதுச்சேரி சட்டமன்றத்திற்கு மூன்று நியமன உறுப்பினர்களை எம்எல்ஏ க்களாக கிரண் பேடி நியமித்திருக்கிறார். இந்த மூன்று பேரும் பாஜக வில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். ''நியமன உறுப்பினர்களை ஆளுநர் சட்டமன்றத்துக்கு நியமிப்பதில் சில நடைமுறை அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றினை கூட பின்பற்றாமல் கிரண் பேடி இந்த காரியத்தை செய்திருக்கிறார். இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல். மேலும் நியமன உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது என்பது புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகர் தான். ஆனால் இந்த முறை கிரண் பேடியே நேரடியாக அவர்களுக்கு எம்எல்ஏ பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்''என்று கிரண் பேடியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். ஜூலை 7 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை விசாரணைக்கு
ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் கிரண் பேடி உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அடுத்தது தலை நகர் டில்லி. ஆம் ஆத்மி கட்சி டில்லி சட்டமன்ற தேர்தலில் பதவியேற்ற நாளிலிருந்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆளுநராக இருந்த ஜங் என்பவருக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஒவ்வோர் நாளும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு தலைவலி கொடுத்து வந்தார் ஜங். பின்னர் ஒரு கட்டத்தில் ஜங் பதவி விலகினார். அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும், அர்விந்த் கெஜ்ரிவால் அரசுக்கும் பெரிய அளவில் மோதல் ஏதும் இதுவரையில் இல்லை என்பது ஒரு நல்ல செய்திதான்.

வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் முதலமைச்சர் மாணிக் சர்கார். இதன் ஆளுநர் ததகதா ராவ். பக்கா ஆர்எஸ்எஸ் காரர். நேரடியாக பெரியளவில் இதுவரையில் மாநில அரசு நிர்வாகத்தில் ததகதா ராவ் தலையிடவில்லை. ஆனால் இவர் அடிக்கடி போடும் ''ட்வீட்'' செய்திகளில் மாநில அரசை குறை கூறுவது மட்டுமின்றி எந்தவோர் விஷயத்திலும் ஆர்எஸ்எஸ் என்ன நிலைப்பாடு எடுக்குமோ அதே நிலைப்பாட்டை எடுத்து அதனை ட்வீட் செய்தியாக வெளியிடுவார். இதில் சில முறை மாணிக் சர்கார் அரசுக்கும், ஆளுநருக்கும் முட்டல், மோதல் வந்தது. ஆனால் தற்போது பதற்றம் சற்றே தணிந்திருக்கிறது.

அடுத்தது தமிழ் நாடு. இங்கே நடப்பது ஒரு விதத்தில் சற்றே வித்தியாசமான கதை. 2016 செப்டம்பர் மாதமே அப்போதைய ஆளுநர் கே.ரோசய்யா தன்னுடைய ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்து விட்டு, ஓய்வு பெற்று தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு புறப்பட்டு போய் விட்டார். ஒன்பது மாதங்கள் கழிந்து விட்டன. ஆனால் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டுக்கு ஒரு நிரந்தர ஆளுநரை மோடி அரசு நியமிக்கவில்லை. 2016 செப்டம்பர் 22 ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5 ம் தேதி காலமானார்.

தமிழ் நாட்டின் ஆளுநர் சி.வித்தியா சாகர் ராவ். இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் முழு நேர ஆளுநர். ஆனால் இவர்தான் தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் கடந்த ஒன்பது மாதங்களாக இருந்து வருகிறார். ''ஜெ மறைவுக்குப் பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் அலுவலகத்தின் தலையீடு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இவை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத சம்பவங்கள். ஆனால் ஆளும் கட்சியில் தற்போது வலுவான அரசியல் தலைமை இல்லாத காரணத்தால், சத்தமின்றி ஆளுநர் அலுவலகம் தமிழக அரசின் நிர்வாகத்தில் பல காரியங்களை செய்து கொண்டிருக்கிறது. நான் என்னுடைய 30 ஆண்டு கால நிருவாக அனுபவத்தில் இப்படிப்பட்ட தோர் சூழலை, அதாவது ஒரு தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசு பதவியில் இருக்கும் சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் இப்படிப் பட்டதோர் தலையீட்டை மேற்கொண்டதை நான் பார்த்தது இல்லை''என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

இதுதான் இன்றைய இந்தியாவில் ஆளுநர்கள் மூலம் மோடி அரசு மேற்கொண்டிருக்கும் அரசியல் நடவடிக்கைகள். மமதா பானர்ஜியால் மோடி அரசை எதிர்த்து தெருவில் இறங்கி போராட முடிகிறது. ஆனால் தமிழக அரசால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியவில்லை. ''இதற்கெல்லாம் காரணங்கள் என்னவென்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதிமுக முக்கியஸ்தர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய ஏராளமான குற்றச் சாட்டுகள் ஆதாரத்துடன் மத்திய அரசிடம் இருப்பதுதான். பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்துகிறது. வேறு ஒரு மாநிலமாக இருந்தால் ஒன்று அந்த அமைச்சர் உடனே பதவியிலிருந்து நீக்கப் பட்டிருப்பார். அல்லது மோடி அரசுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் மாநில ஆளும் கட்சியிடம் இருந்து வந்திருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் இரண்டும் நடக்கவில்லை. இதிலிருந்தே நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது, யாருடைய குடுமி யாருடைய கைகளில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்'' என்று மேலும் கூறுகிறார் அந்த அதிகாரி.

Recommended Video

    குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பிறகு இன்னும் அதிகமான, வித வித மான நாடகங்கள் தமிழ் நாட்டு அரசியலில் அரங்கேற காத்திருக்கின்றன. அதுவரையில் நாம் சற்றே பொறுமை காக்க வேண்டும் தான். ஏனெனில் திருவாளர் பொது ஜனத்துக்கு அது தவிர வேறு வழியில்லை!

    English summary
    Governors have become big issue in non BJP ruling states including West Bengal and Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X