ஜிஎஸ்டியினால் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிப்பு - ஆர்பிஐ அறிக்கை
சென்னை: பணமதிப்பு நீக்கத்தின் போது இருந்த சிரமத்தை விட சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர்தான் சிறு, நடுத்தர வணிகர்களின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் உயர்மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இது பொது மக்களையும், தொழில் துறையினரையும் பாதித்தது. கறுப்பு மற்றும் கள்ள பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று மோடி கூறினாலும் பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான். டிஜிட்டல் இந்தியா என்னும் முழக்கத்துடன் மின்னணு பணபரிவர்த்தனையை அறிமுகம் செய்யப்பட்டது. இது சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த அடியாக நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என்ற முழக்கத்துடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சரக்க மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு மேலான நிலையில் ஜிஎஸ்டியினால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறு வணிக நிறுவனங்கள் பாதிப்பு
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதியானது பல்வேறு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த பாதிப்பு பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான பிறகு ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகும்.

சிறு தொழில் மூலதனங்கள்
ஜிஎஸ்டி ரீஃபண்ட் கிடைக்கப் பெறுவதில் சிக்கல், உள்ளீட்டு வரிக் கடன்கள் போன்றவை அத்துறையினரைப் பெரிதும் பாதித்துள்ளன. அந்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மூலதனத்தைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடன் உதவி கிடைப்பதில் சிக்கல்
பண மதிப்பு நீக்கத்திற்கு முன்பாகவே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடனுதவிகள் குறைந்து வந்த நிலையில், பண மதிப்பு நீக்கம் கடனுதவிகளை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டி அமலான பிறகு அது இன்னும் மோசமாகி, தொழில் நடத்தவே முடியாத சூழலுக்கு பலரைத் தள்ளியது.ஜிஎஸ்டியின் பயன்களில் ஒன்றாகக் கூறப்பட்ட சிறு நிறுவனங்களுக்கான கடனுதவி அம்சங்கள் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான கடனுதவி 8.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது 2015ஆம் ஆண்டின் அளவை விட மிகவும் குறைவாகும்.

ரொக்க பணப் பரிவர்த்தனை
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில், நகை - ரத்தினங்கள், ஜவுளி, தோல், கைவினைப் பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதிப் பிரிவில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இத்துறை ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளையே பெருமளவில் சார்ந்திருக்கின்றன. ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு இத்துறையை மோசமாக பாதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.