For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி - இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கை

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை 18 சதவிகிதம் வரையில் உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்கும

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ரூ.68-70 வரம்புக்குள் மீட்டுக் கொண்டுவருவதற்காக, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இரண்டாம்கட்ட நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தவுள்ளதாகப் பொருளாதார விவகார செயலாளரான சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது ரூபாயின் மதிப்பு 72 ரூபாயை தாண்டிவிட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதன் மதிப்பு 11.89 சதவிகிதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

Government plans import curbs to check rupee fall

ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி மூலம் உள்நாட்டில் தொழில் புரியும் நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை இதுவரையில் உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில், அக்டோபர் மாதம் முதல் அவற்றின் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பழங்கள், அழகு மற்றும் ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் அதிக விளைவுகளைச் சந்திக்கின்றன. தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், வரும் நாட்களிலும் வீழ்ச்சி தொடர்ந்தால் தொழிலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இறக்குமதியைச் சார்ந்து தொழில் புரியும் ஐஜி இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடு

இதனிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ரூ.68-70 வரம்புக்குள் மீட்டுக் கொண்டுவருவதற்காக, அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த இரண்டாம்கட்ட நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தவுள்ளதாகப் பொருளாதார விவகார செயலாளரான சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு 12 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்ததும் தற்காலிக நிலைமைதான் என்றும் அவர் கூறினார்.

இம்மாதத்தின் தொடக்கத்தில் ஏற்கெனவே ரூபாய் மதிப்பை மீட்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருந்தது. தற்போது அத்தியாவசியமற்ற பொருட்களின் பட்டியல் ஒன்றை மத்திய அரசு தயாரித்துள்ளது. இப்பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களின் பெயர்கள் அடங்கிய தனி பட்டியலையும் மத்திய அரசு தயாரித்துள்ளது. இப்பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவையான கொள்கை ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.

தங்கம் இறக்குமதி வரியை உயர்த்த முடிவு

இந்த நிலையில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தங்கம் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 சதவிகிதமாக அதிகரித்திருந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் போன்ற காரணங்களால்தான் இப்பிரச்சினை ஏற்பட்டது. 2013ஆம் ஆண்டில் இதேபோல, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தபோது தங்கம் இறக்குமதி மீதான வரியை இந்திய அரசு 10 சதவிகிதமாக உயர்த்தியிருந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, இறக்குமதி வரியுடன் சேர்த்து 3 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழலில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க, தங்கம் மீதான இறக்குமதி வரியை 12 அல்லது 13 சதவிகிதமாக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. அவ்வாறு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டால் இந்தியாவின் நகைகள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏற்றுமதி மந்தமாகவே இருந்தது. ஜூலை மாதத்தில்தான் 17 சதவிகித உயர்வுடன் 2.49 பில்லியன் டாலர் மதிப்புக்கு நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. எனவே இப்போது இறக்குமதி வரியை உயர்த்தினால் மீண்டும் இத்துறை பாதிக்கப்படும் என்று நகை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The government will very soon implement the second set of measures including curbs on imports of non-essential items to shore up rupee to 68-70 level against the US dollar, economic affairs secretary Subhash Chandra Garg said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X